இராமநாதபுரம்: 1964ல் தாக்கிய கோரப்புயலினால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து தனுஷ்கோடி தற்போதும் மீளவில்லை எனவும் தனுஷ்கோடியில் அடிப்படை கட்டமைப்புகளை ஏற்படுத்தி தர வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாட்டின் கடைக்கோடி கிராமம் வரை தொழில்நுட்ப வசதிகள் எட்டி இருக்கும் தற்போதைய டிஜிட்டல் காலத்தில் அதிகனமழை புயல் போன்ற பேரிடர் ஏற்படுவதை முன்கூட்டியே கணித்து பொதுமக்களுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க முடிகிறது.
ஆனால் இது போன்ற தொழில்நுட்ப வளர்ச்சி இல்லாத 1964 காலகட்டத்தில் இந்திய வரைபடத்தில் கடைசியில் உள்ள ராமேஸ்வரத்தை கோரப் புயல் ஒன்று தாக்கியது. அந்த கோரப்புயலின் தாண்டவத்தில் இந்திய பெருங்கடலும், வங்கக்கடலும் சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ள தனுஷ்கோடி மொத்தமுமாக சிதைந்து போனது. சிறு மீன்பிடி துறைமுகம், ரயில் நிலையம் அரசு கட்டிடங்கள் நினைவு சின்னங்கள் வழிபாட்டு தளங்கள் குடியிருப்புகள் எல்லாம் புயலுக்கு இரையானது மட்டுமின்றி ஆயிரக்கணக்கான உயிரிழப்புகளும் ஏற்பட்டன.
தனுஷ்கோடிக்கு கடந்த சில வருடங்களாக தான் சுற்றுலா பயணிகள் வருகை சற்று அதிகரித்துள்ளது. தகவல் தொடர்பு வசதிகள், குடிநீர், கழிப்பறை, மருத்துவ வசதிகள், பொது போக்குவரத்து வசதிகள் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகளை ஏற்படுத்தி தனுஷ்கோடியை மீட்டெடுக்க அரசு முன்வர வேண்டும் என்கின்றனர் தனுஷ்கோடி மக்கள். தனுஷ்கோடியை அடுத்த தலைமுறைக்கு பழைய கடல்சார் வணிக நகரமாகவே முன்னேற்றி மீட்டு கொடுக்க ஒன்றிய மாநில அரசுகள் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர் தனுஷ்கோடி மக்கள்.
The post கோரப்புயலினால் சிதைந்து 60 ஆண்டுகளை கடந்த தனுஷ்கோடி: வாழ்வாதாரத்தை உயர்த்த ஒன்றிய, மாநில அரசுகள் உதவ கோரிக்கை appeared first on Dinakaran.