திருப்போரூர்: சென்னை அருகே கோவளத்தில் கடற்கரை மற்றும் முகத்துவார பகுதிகளை, வானில் இருந்து ரசிக்கும் வகையில் ஹெலிகாப்டர் சுற்றுலா தொடங்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கோவளத்தில் தனியார் நிறுவனத்தின் மூலமாக கடந்த ஆண்டு ஹெலிகாப்டர் சுற்றுலா தொடங்கப்பட்டது. பல்வேறு நிர்வாக காரணங்களால் இந்த சுற்றுலா நிறுத்தப்பட்டது.
தற்போது, இந்த ஹெலிகாப்டர் சுற்றுலாவை அந்த தனியார் நிறுவனம் மீண்டும் தொடங்கி உள்ளது. நேற்று, தொடங்கிய இந்த பயணம் இன்றும், நாளையும் என 3 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. பின்னர், வரும் 17ம்தேதி முதல் 19ம்தேதி வரை 3 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. இந்த, சுற்றுலாவில் நபர் ஒருவருக்கு ரூ.6,000 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. பைலட்டை தவிர்த்து 6 பேர் செல்லும் வகையில், இந்த ஹெலிகாப்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த, ஹெலிகாப்டர் வான்வெளியில் அதிகபட்சமாக 1000 அடி உயரம் வரை பறந்து செல்கிறது. 5 நிமிடம் முதல் 7 நிமிடம் வரை பயண நேரம் வரையறுக்கப்பட்டுள்ளது. அதன்படி, நேற்று ஆன்லைனில் 6 ஆயிரம் கட்டணம் செலுத்தி, முன்பதிவு செய்தவர்கள் பலர் ஆர்வமாக கிழக்கு கடற்கரை சாலையில் ஹெலிகாப்டரில் வானில் பறந்து அழகிய கடற்கரை, பக்கிங்காம் கால்வாய், பழைய மாமல்லபுரம் சாலையின் அழுகிய வானுயர்ந்த கட்டிடங்கள் மற்றும் இயற்கை காட்சிகளை கழுகு பார்வையில் வானில் வட்டமடித்தபடியே ஆர்வமாக பார்த்து ரசித்தனர். முன்னதாக, ஹெலிகாப்டர் பயணம் மேற்கொள்ள வந்த பயணிகளுக்கு உடல் எடை பரிசோதனை செய்யப்பட்டு ஆதார் எண் உறுதி செய்யப்பட்டு அனுமதி வழங்கப்பட்டது.
The post கோவளத்தில் ஹெலிகாப்டர் சுற்றுலா தொடக்கம்: ஒருவருக்கு ரூ.6,000 கட்டணம் appeared first on Dinakaran.