கோவை: கோவை, மதுரை ஆகிய நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டப்பணிகளை துவக்குவது தொடர்பாக அனைத்து துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் கோவையில் நேற்று நடந்தது.
இக்கூட்ட முடிவில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண்மை இயக்குநர் எம்.ஏ.சித்திக் நிருபர்களிடம் கூறியதாவது:
கோவையில் ரூ.10,740 கோடி செலவிலும், மதுரையில் ரூ.11,340 கோடி செலவிலும் மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் துவங்க உள்ளன. கோவை மாநகரில் உக்கடத்தில் துவங்கி, ரயில் நிலையம், அவினாசி ரோடு வழியாக நீலாம்பூர் வரை 20.4 கி.மீ தூரம் ஒரு வழித்தடத்திலும், கோவை ரயில் நிலையத்தில் துவங்கி, காந்திபுரம் ஆம்னி பஸ் நிலையம் வழியாக சத்தி ரோடு வழியாம்பாளையம் பிரிவு வரை 14 கி.மீ தூரம் வரை இன்னொரு வழித்தடத்திலும் இத்திட்டம் அமையும். மொத்தம் 34.8 கி.மீ தூரம் வரை மெட்ரோ ரயில் இயக்கப்படும். இதற்காக, 32 ஸ்டேஷன்கள் அமைக்கப்படும்.
மதுரையில், திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரை 32 கிமீ தூரம் மெட்ரோ ரயில் திட்டம் அமல்படுத்தப்படும். மதுரையில் முழுக்க முழுக்க சுரங்கப்பாதை வழியாக மெட்ரோ ரயில் இயக்கப்படும். ஆனால், கோவையில் மேம்பால தூண்கள் வழியாக மெட்ரோ ரயில் இயக்கப்படும். இதற்காக, சராசரியாக 30 மீட்டர் இடைவெளியில் தூண்கள் அமைக்கப்படும். நீலாம்பூரில் மெட்ரோ ரயில் டெப்போ அமைக்கப்படும். கோவையில் மெட்ரோ ரயில்பாதை அமைக்க 10 ஹெக்டேர் நிலம் தேவைப்படும். தவிர, நீலாம்பூரில் டெப்போ அமைக்க 16 ஹெக்டேர் நிலம் தேவைப்படும். நிலம் ஆர்ஜிதம் செய்யும் பணி வருகிற ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் துவங்கும். இப்பணி, ஒன்றரை ஆண்டு முதல் இரண்டரை ஆண்டு வரை நடக்கும்.
இப்போது பூர்வாங்க பணிகள் துவங்கிவிட்டன. நிலம் கையகப்படுத்தும்போது அதன் உரிமையாளர்களுக்கு, அதற்குரிய இழப்பீடு வழங்கப்படும். இத்திட்டத்துக்கான நிதி, மாநில அரசு, ஒன்றிய அரசு மற்றும் பன்னாட்டு நிதி நிறுவனங்கள் மூலம் பெறப்படும். இந்த ரயிலில் மொத்தம் 3 கோச் இருக்கும். இதில், ஒரே நேரத்தில் 700 பேர் பயணிக்கலாம். இத்திட்டம் அமலுக்கு வந்தால் மாநகரில் போக்குவரத்து நெரிசல் பெருமளவு குறையும். கட்டுமான பணி துவக்கப்பட்ட நாளில் இருந்து, மூன்றரை ஆண்டுகளில் இத்திட்டம் செயல்பாட்டுக்கு வரும். 150 ஆண்டு காலத்துக்கு இத்திட்டம் பயன்தரும். எதிர்காலத்தில், மேட்டுப்பாளையம் ரோடு, திருச்சி ரோடு பகுதியிலும் விரிவாக்கம் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
The post கோவை, மதுரை மெட்ரோ ரயிலுக்காக நிலம் ஆர்ஜிதம் செய்யும் பணி ஜனவரியில் துவங்கும்: மேலாண்மை இயக்குநர் தகவல் appeared first on Dinakaran.