கோவை: கோவை மத்திய சிறையில் உணவுக் கழிவில் இருந்து ‘பயோ கேஸ்’ உற்பத்தி செய்யும் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்திட்டம் முழு அளவில் செயல்பாட்டுக்கு வரும்போது, சிறை உணவுக் கூடத்தில் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. கோவை மத்திய சிறையில் விசாரணைக் கைதிகள், தண்டனைக் கைதிகள், குண்டர் தடுப்புப் பிரிவு கைதிகள், உயர் பாதுகாப்புப் பிரிவு கைதிகள் என மொத்தம் 1,300-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் குற்றங்களுக்கு தகுந்தவாறு சிறையின் பல்வேறு பிளாக்குகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சிறை வளாகத்தில் ஆண்கள் சிறை மட்டுமின்றி பெண்கள் சிறையும் அமைந்துள்ளது. கைதிகளுக்கு உணவு வழங்குவதற்காக சிறை வளாகத்தில் உணவு தயாரிக்கும் கூடம் உள்ளது. இங்கு 50-க்கும் மேற்பட்ட கைதிகள் பணியாற்றி வருகின்றனர். சிறையில் விளைவிக்கப்படும் காய்கறிகள், ஒண்டிப்புதூரில் உள்ள திறந்த வெளி சிறைச்சாலையில் விளைவிக்கப்படும் காய்கறிகள் ஆகியவற்றை பயன்படுத்தியும், வெளியிட மார்க்கெட்டுகளில் இருந்து வாங்கி வரப்படும் காய்கறிகளை பயன்படுத்தியும் உணவுகள் தயாரிக்கப்படுகின்றன.