கோவை: கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நில ஆர்ஜிதம், மழைநீர் வடிகால் மாற்றி அமைத்தல் ஆகிய ஆயத்தப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளன என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் (சிஎம்ஆர்எல்) நிர்வாக இயக்குநர் எம்.ஏ.சித்திக் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது: ''கோவை மாநகர பகுதியில் 34.8 கிலோ மீட்டர் தொலைவில் 2 வழித்தடங்களுடன் 32 ரயில் நிலையங்களுடன் மெட்ரோ ரயில் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. சிஎம்ஆர்எல் மூலம் விரிவான திட்ட அறிக்கையை மாநில அரசு மூலம் மத்திய அரசுக்கு சமர்ப்பித்தது. சமீபத்தில் மத்திய அரசு, சில கூடுதல் அறிக்கைகளை கேட்டது. தற்போது அந்த விவரங்கள் மாநில அரசு மூலம் மத்திய அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கான ஒப்புதலை எதிர்பார்த்துள்ளோம்.