மகாகவி பாரதியாரின் ஆன்மிக பரிமாணத்தை காட்டும் ‘சக்திதாசன் – கடவுளை கண்ட கவிஞன்’ ஆவணப் படத்தை சென்னை ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி சத்ய ஞானானந்தர் வெளியிட்டார். கடின உழைப்பில் உருவாகியுள்ள இப்படம் அனைத்து தரப்பினரையும் சென்றடைய வேண்டும் என்று வாழ்த்தினார்.
‘சக்திதாசன் – கடவுளை கண்ட கவிஞன்’ என்ற ஆவணப் படத்தின் வெளியீட்டு விழா, சென்னை மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் கடந்த 18-ம் தேதி விமரிசையாக நடைபெற்றது. இதில், படத்தின் 10 நிமிட முன்னோட்ட காட்சி திரையிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஆவணப் படத்தை சென்னை ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி சத்ய ஞானானந்தர் வெளியிட்டார். அவர் பேசும்போது, ‘‘கடின உழைப்பு செலுத்தப்பட்டுள்ள இப்படத்தை முதலில் நம் குடும்பத்தினர் முதல் அனைத்து தரப்பினரையும் சென்றடைய செய்ய வேண்டும்’’ என்றார்.