சென்னை: சச்சின் படத்தில் ஜெனிலியாவின் தோழியாக வரும் நடிகை ரஷ்மி வெளியிட்டுள்ள இன்ஸ்டா வீிடியோவில், “இந்தப் படத்தில் நடித்த என்னை அடையாளம் கண்டு, பாராட்டுத் தெரிவிக்கும் ரசிகர்களின் வாழ்த்து அலை போல் வருகிறது. அதற்காக அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
ஏப்ரல் 18-ம் தேதி விஜய் நடித்த ‘சச்சின்’ திரைப்படம் மறுவெளியீடு செய்யப்பட்டது. இதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தப் படத்தில் ஜெனிலியாவின் தோழியாக நடிகை ரஷ்மி என்பவர் நடித்திருந்தார். அந்தப் படத்தில் வரும் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் மட்டும் அண்மையில் வைரலானது. இதைத் தொடர்ந்து இன்ஸ்டா வீடியோ ஒன்றை ரஷ்மி வெளியிட்டுள்ளார். அதில் “நான் இந்த ரீல்ஸைப் பதிவிடுவதற்கு காரணம், கடந்த இரண்டு நாட்களாக பலரும் என்னை நினைவுகூர்கின்றனர். அதேநேரம், இயக்குநர் ஜான் இயக்கத்தில், நடிகர் விஜய், நடிகைகள் ஜெனிலியா பிபாஷா பாஷு உள்ளிட்டோர் நடித்த சச்சின் படத்தின் மறுவெளியீட்டைக் கொண்டாடி வருகிறோம்.