சென்னை: சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் சர்வதேச மகளிர் தின விழா நடந்தது. இந்த விழாவில் ஐகோர்ட் நீதிபதி மஞ்சுளா பேசியதாவது: பெண்கள் எல்லாவற்றிற்கும் போராட வேண்டி இருக்கிறது. பல சவால்களை தாண்ட வேண்டியுள்ளது. பெண்கள் வேலை செய்யக்கூடிய இடங்களில் கூட பாலியல் ரீதியான பிரச்சனை உள்ளது. பிரச்சனை நடக்கக்கூடிய இடத்தில் உடனடியாக சட்டத்தை போட்டால் தவறு சரியாகி விடாது. எண்ணங்கள் மாற வேண்டும்.
இந்தியாவில் கல்வி மற்றும் மருத்துவம் கிடைப்பது போல வேறு எங்கேயும் இல்லை. பணி செய்யக்கூடிய இடங்களில் உள் விசாரணைக் குழு 2013ல் போடப்பட்டுள்ளது. 12 வருடங்கள் ஆகி விட்டது. ஆனால் சரியாக குற்றங்களை பதிவிடாமல் பார்த்துக் கொள்கிறது. பொதுவாக பெண்கள் ஒரு கிளப், கமிட்டியில் இருக்கிறோம் என்றால், பெண்கள் நமக்கு என்ன பொறுப்பு இருக்கிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். வெறுமனே உறுப்பினராக இருக்கக்கூடாது என்றார்.
சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் பேசியதாவது: மகளிர் தினம் மகளிர் உரிமையை எடுத்துக்கூற வேண்டும் என்பதற்காக தான் கொண்டாடப்படுகிறது. நிறைய மகளிர் பத்திரிகைக்கு துறைக்கு வந்துள்ளீர்கள். ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது. 1996ல் இட ஒதுக்கீடு மூலம் அரசியலுக்குள் நுழைந்தேன். 28 வருடங்களாக அரசியலில் இருந்து வருகிறேன். தமிழகத்தின் ஒரே பெண் மாவட்டச் செயலாளர் நான்தான். என்னை நான் இதற்காக தயார்படுத்திக் கொண்டேன்.
நானும் சந்தித்த தோல்விகள், பிரச்சனைகள் உண்டு. எதையும் பார்த்து துவண்டு போகாமல் பெண்கள் சாதிக்க வேண்டும். குழந்தைகள் காப்பகம் மற்றும் வெளி மாநில பெண் பத்திரிகையாளர்களுக்கு தங்கும் விடுதி வேண்டும் என இரண்டு கோரிக்கை வைத்துள்ளனர். அதை நிச்சியமாக முதலமைச்சரிடம் கொண்டு சென்று நல்ல செய்தியை சொல்கிறேன் என்றார். நடிகை கவுதமி, பத்திரிகையாளர்கள் வைஷ்ணா ராய், சுகிதா, பாரதி, அகிலா ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.
The post சட்டத்தை போட்டால் மட்டும் பிரச்னை சரியாகி விடாது: எண்ணங்கள் மாற வேண்டும் என நீதிபதி மஞ்சுளா பேச்சு appeared first on Dinakaran.