வாஷிங்டன்: அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களில் முதல்கட்டமாக 205 பேரை ராணுவ விமானத்தில் அந்நாடு திருப்பி அனுப்பி உள்ளது. அமெரிக்க அதிபராக 2வது முறையாக பதவியேற்ற டிரம்ப் சட்டவிரோதமாக குடியேறியுள்ள வெளிநாட்டினரை நாடு கடத்த உத்தரவிட்டார். அந்நாட்டில் 1 கோடியே 10 லட்சம் பேர் உரிய ஆவணங்கள் இன்றி குடியேறி உள்ளதாக கூறப்படுகிறது.
டிரம்ப் உத்தரவுப்படி அவர்களையும் வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் தொடங்கியதை அடுத்து 6 ராணுவ விமானங்களில் கௌதமாலா, பெரு நாட்டினர் திருப்பி அனுப்பப்பட்டனர். டெக்சாஸ் மாகாணம், கலிபோர்னியா மாகாணம், சான்டிக்கோவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 55 ஆயிரம் பேரை அவர்களது நாடுகளுக்கு திருப்பி அனுப்பும் நடவடிக்கையை தற்போது பென்டகன் மேற்கொண்டுள்ளது.
அதன் ஒரு கட்டமாக டெக்சாஸ் மாகாணம் சான் அன்டோனியாவில் இருந்து பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசுக்கு 205 இந்தியர்களுடன் C17 ரக அமெரிக்க விமானம் புறப்பட்டது. கௌதமாலாவுக்கு ராணுவ விமானம் மூலம் ஒருவரை திருப்பி அனுப்ப ரூ.4 லட்சம் செலவழிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க குடியேற்றத்துறை தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறி உள்ள இந்தியர்களின் எண்ணிக்கை தற்போது 7 லட்சத்து 25 ஆயிரம் என கணக்கிடபட்டுள்ளது. அவர்களில் 20 ஆயிரம் பேர் உடனடியாக நாடுகடத்தப்பட உள்ளனர். 1100 இந்தியர்களை கடந்த ஆண்டு அமெரிக்கா திருப்பி அனுப்பியது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே இந்தியாவில் கல்வி, சுகாதாரம் மற்றும் சமூக நலத்திட்டங்களுக்காக வழங்கும் நிதி உதவியை மறுஅறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைப்பதாக சர்வதேச வளர்ச்சிக்காக நிதி வழங்கும் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் நடப்பாண்டில் செயல்படுத்தப்பட்டு வரும் 1218 கோடி மதிப்பிலான நலத்திட்டங்கள் கைவிடப்படும் நிலை உருவாகி உள்ளது.
The post சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றி வரும் அமெரிக்கா: முதற்கட்டமாக 205 இந்தியர்கள் வெளியேற்றம் appeared first on Dinakaran.