அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 205 இந்தியர்களை அதிபர் ட்ரம்ப் அரசு பொறுப்பேற்றதும் இந்தியாவுக்கு நாடு கடத்தியுள்ளது. இது ஒரு பொறுப்பான அரசின் பொறுப்புள்ள செயல். ஆனால், தமிழகத்தில் வங்கதேசம் நாட்டை சேர்ந்த 175 பேர் வெவ்வேறு இடங்களில் சட்ட விரோதமாக தங்கியிருந்ததாக கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டனர். அவர்களில் 75 பேர் ஜாமீன் பெற்றதும் இங்கிருந்து எந்த தடையுமின்றி தப்பிச் சென்றுள்ளனர்.
வங்கதேச நாட்டில் இருந்து பலர் மேற்குவங்கம் வழியாக ஊடுருவி தமிழகத்தில் சென்னை புறநகர் பகுதிகள், திருப்பூர், கோவை, பெருந்துறை, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் போலி ஆதார் ஆவணங்களுடன் தங்கி, வேலை பார்ப்பதாகவும், போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதாகவும் மத்திய புலனாய்வு அமைப்புகளிடம் இருந்து அவ்வப்போது எச்சரிக்கை மணி அடிக்கப்படுகிறது. தமிழக காவல் துறையும் அவ்வப்போது சோதனைகள் நடத்தி, சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டவரை கைதுசெய்கிறது. அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் ஜாமீன் பெறுகின்றனர்.