சென்னை: சென்னை கிண்டியில் உள்ள தொழிலாளர் காலனியில் எஸ்.கே.கண்ணன் என்பவருக்கு குடியிருப்பு ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதனை தற்போதைய அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை மாநகராட்சி கவுன்சிலராக இருந்தபோது, தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி போலி ஆவணங்கள் மூலம் தன் மனைவி காஞ்சனா பெயருக்கு மாற்றம் செய்து கொண்டதாக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடர்ந்த மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக அமைச்சர் மா.சுப்ரமணியன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மற்றும் பார்த்திபன் என்பவர் தாக்கல் செய்திருந்த கேவியட் மனு ஆகிய இரண்டும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சுதன்சு துலியா மற்றும் வினோத் சந்திரன் ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது அமைச்சர் மா.சுப்ரமணியன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் முகுல் ரோத்தகி மற்றும் பி.வில்சன் ஆகியோர் வாதத்தில், “குடியிருப்பு ஒதுக்கீடு செய்யப்பட்ட போது அவர் மேயராக இருந்தார். ஆனால் தற்போது அமைச்சராக இருந்து வருகிறார். எனவே இது அரசியல் ரீதியாக தொடரப்பட்ட வழக்கு. நான் மேயர் என்பதால் அரசிடமிருந்துதான் என்னை விசாரிக்க ஒப்புதல் வாங்கி இருக்க வேண்டும். ஆனால் சபாநாயகரிடமிருந்து ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இது சட்டவிதி மீறல். எனவே இந்த விவகாரத்தில் விசாரணை நடத்துவதற்கு அரசு ஒப்புதல் அளிக்கவில்லை, அப்படி இருக்கையில் இந்த குற்றச்சாட்டை ரத்து செய்ய வேண்டும்” என்று தெரிவித்தார். வாதங்களை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை வரும் 21ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
The post சட்ட விதிகளுக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மேல் முறையீடு appeared first on Dinakaran.