கோவை: கடந்த சில மாதங்களாக பெரியளவில் மாற்றம் காணப்படாத நிலையில் மீண்டும் தங்கத்தின் விலை உயர தொடங்கியுள்ளது. ஒரு சவரன் (8 கிராம்) விலை ரூ.60 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. கரோனா தொற்று பரவலுக்கு பின் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ரஷ்யா – உக்ரைன் மற்றும் இஸ்ரேல் – பாலஸ்தீன் நாடுகளுக்கு இடையிலான போர், உலகளவில் நிலவும் பொருளாதார மந்த நிலை உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் மீது முதலீடு அதிகரித்தது. இதனால் தங்கத்தின் விலையில் தாக்கம் ஏற்பட்டது.
மக்கள் நலனை கருத்தில் கொண்டு தங்கம் இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட வரியை 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக மத்திய அரசு குறைத்தது. அப்போது, சவரனுக்கு ரூ.4 ஆயிரம் வரை விலை குறைந்தபோதும், சர்வதேச சந்தை நிலவரம் காரணமாக விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எதிர்வரும் நாட்களில் தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்கும் என தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.