சென்னை: “சாத்தனூர் அணையிலிருந்து முன்னறிவிப்பு இன்றி தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்படும் நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் அனைத்து குடும்பங்களுக்கும் தலா ரூ.25,000 இழப்பீடு வழங்க வேண்டும். சேதமடைந்த பயிர்களுக்கும், உயிரிழந்த கால்நடைகளுக்கும் உரிய இழப்பீடு வேண்டும். மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக தமிழக அரசு கோரும் நிவாரண நிதியை மத்திய அரசு உடனே வழங்க வேண்டும்.” என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாட்டில் நடப்பது மக்கள் நலனில் அக்கறையற்ற அரசு, சிந்திக்கும் திறனற்ற அரசு என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது. சாத்தனூர் அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாமல் நள்ளிரவில் வினாடிக்கு 1.70 லட்சம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டதால் திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்ட மக்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பொறுப்பற்ற அரசின் மிக மோசமான இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.