ஊட்டி: ஊட்டியில் சார் பதிவாளர் பயணித்த காரில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய சோதனையில் ரூ.3.98 லட்சம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நீலகிரி மாவட்டம் ஊட்டி வட்டாட்சியர் அலுவலகம் அருகே எண் 2 இணை சார் பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் ஊட்டி மற்றும் குந்தா வட்டத்திற்குட்பட்ட கிராம பகுதிகளை சேர்ந்த நிலங்கள் பத்திரப்பதிவு செய்யப்படுகின்றன. இதுதவிர வில்லங்க சான்று வழங்குவது உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த அலுவலகத்தில் ஷாஜகான் (55) என்பவர் சார் பதிவாளராக பணியாற்றி வந்தார்.
திருப்பூருக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்ட நிலையில், திருப்பூர் புறப்பட்டு செல்வதற்காக நேற்று மாலை அவர், தங்கியிருக்கும் குடியிருப்பிற்கு வாடகை கார் மூலம் சென்றுள்ளார். ஊட்டி அரசு கலை கல்லூரி சாலையில் ஷாஜகான் சென்றபோது, அவர் சென்ற காரை லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத்துறை ஆய்வாளர் சண்முகவடிவு தலைமையில் போலீசார் மற்றும் வட்டாட்சியர் சீனிவாசன் அடங்கிய குழுவினர் மடக்கி பிடித்து சோதனை செய்தனர்.
அப்போது காரில் இருந்த ஒரு பையில் ரூ.3 லட்சத்து 98 ஆயிரத்து 500 ரொக்கமாக பிடிபட்டது. இதைத்தொடர்ந்து ஷாஜகானை அவரது அலுவலகத்திற்கு அழைத்து சென்று இந்த பணம் யாரிடம் இருந்து பெறப்பட்டது? நிலம் பதிவு செய்யப்பட்டதில் லஞ்சமாக பெறப்பட்டதா? என்பது குறித்து விசாரித்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
The post சார் பதிவாளர் காரில் ரூ.3.98 லட்சம் பறிமுதல்: லஞ்சப்பணமா? என விசாரணை appeared first on Dinakaran.