டமாஸ்கஸ்: சிரியாவில் கிளர்ச்சி படைகளின் தொடர் தாக்குதலால், அந்நாட்டு ராணுவம் தெற்கின் பெரும்பான பகுதிகளில் இருந்து வெளியேறியுள்ள நிலையில், தரா மற்றும் ஸ்வீடா நகரங்களை கிளர்ச்சிப் படைகள் கைப்பற்றின. 2011-ம் ஆண்டு அதிபர் பஷார் அல்-ஆசாத்துக்கு எதிராக தராவில் இருந்துதான் கிளர்ச்சி தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஒரு வாரத்தில் சிரியாவின் ராணுவம் இழந்திருக்கும் நான்காவது மிகப் பெரிய நகரம்தான் தரா. கடந்த மாத இறுதியில் சிரியாவின் இரண்டாவது மிகப் பெரிய நகரமான அலெப்போவில் இருந்து அரசுப் படைகள் விரைவாக வெளியேறியதால், அந்த நகரை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றினர். இதைடுத்து, கடந்த வியாழக்கிழமை ஹோமா நகரையும், வெள்ளிக்கிழமை சிரியாவின் மூன்றாவது பெரிய நகரமான ஹாம்ஸ் நகரையும் கைப்பற்றினர்.