ஆலந்தூர்: சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் இந்திய ரத்தவியல் மற்றும் புற்றுநோய் குழுமம், இந்திய குழந்தைகள் முகமை சார்பில், நேற்று மாலை கிண்டியில் குழந்தைகள் புற்றுநோய் பதிவேடு மற்றும் தரவுகளை வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வுத்துறை கூடுதல் செயலாளர் சுப்ரியா சாகு, அமைப்பின் செயல் துணை தலைவர் ஹேமந்த்ராஜ், அடையாறு புற்றுநோய் மருத்துவமனை இயக்குனர் சுவாமிநாதன் ராஜாராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்று, குழந்தைகள் புற்றுநோய் பதிவேடுகள் குறித்த தரவுகளை வெளியிட்டார். பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், இந்தியாவின் முதல் பெண் மருத்துவரான முத்துலட்சுமி ரெட்டியால் துவக்கப்பட்ட அடையாறு புற்றுநோய் மருத்துவமனை, பெருமைமிக்க புற்றுநோய் சிகிச்சை தரும் மருத்துவமனையாக திகழ்கிறது. சென்னையில் மக்கள்தொகை அடிப்படையில், குழந்தைகள் பருவ புற்றுநோய்க்கான பரிசோதனை செய்வதற்குரிய பணிகள் துவங்கப்பட்டு உள்ளன. இதன்மூலம் தமிழகத்தில் எவ்வளவு குழந்தைகள் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர் என்பதை கண்டறிந்து சிகிச்சையளிக்க பயனுள்ளதாக அமையும். இப்பணி, தமிழகத்தில் மட்டும் பிரத்தியேகமாக நடைபெறுகிறது. அவ்வகையில், தமிழகத்தின் 4 மாவட்டங்களில் புற்றுநோய் கண்டறியும் பணி நடந்து வருகிறது.
சிறப்பு மருத்துவர் காலி பணியிடங்களை நிரப்புவதை பொறுத்தமட்டில், தமிழகத்தில் டிபிஎச், டிஎம்எஸ், இஎஸ்ஐ போன்ற அமைப்புகள் மூலம் கண்டறிந்ததில், மகப்பேறு 207, இதய அறுவை சிகிச்சை 16, நரம்பியல் அறுவை சிகிச்சை உள்பட மொத்தம் 658 சிறப்பு மருத்துவ காலி பணியிடங்களை நிரப்புவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு, தமிழக முதல்வரின் வழிகாட்டுதல்படி, அவர்களுக்கு இம்மாதத்துக்குள் நேர்காணல் மற்றும் கலந்தாய்வு மூலம் காலி பணியிடங்களை நிரப்புவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அதற்கான அரசாணை விரைவில் வெளிவரும்.
தமிழ்நாட்டில் மட்டும்தான் புதிய மருத்துவர், மருத்துவ பணியாளர்களை தேர்வு செய்யும்போது கலந்தாய்வு நடத்தி, அவர்களுக்கு விருப்பமான இடங்களில் பணி தரப்படுகிறது, இக்கலந்தாய்வு இம்மாதம் 3வது வாரத்தில் நடைபெறும். இம்மாதத்தில் தமிழகத்தில் இருக்கும் அனைத்து மருத்துவர்களும், அவர்களுக்கு பிடித்தமான இடத்தில் பணி செய்யவிருக்கின்றனர் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதியளித்தார்.
The post சிறப்பு மருத்துவ காலி பணியிடங்களுக்கு கலந்தாய்வு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி appeared first on Dinakaran.