சென்னை: திருப்பரங்குன்றத்தில் சிறுமிக்கு சிறப்பு காவல் ஆய்வாளர் பாலியல் தொந்தரவு கொடுத்த செய்தி அதிர்ச்சி அளிப்பதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினரகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: 'மதுரை திருப்பரங்குன்றத்தில் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக சிறப்பு காவல் ஆய்வாளர் ஒருவர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பதாக நாளிதழ்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவோருக்கு வழங்கப்படும் தண்டனையை அதிகரிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்ட நாளில், காவல் ஆய்வாளர் ஒருவர், அதே குற்றச்சம்பவத்திற்காக கைது செய்யப்பட்டிருப்பது காவல்துறையினர் மீதான நம்பிக்கையை இழக்கச் செய்திருக்கிறது.