திருப்பூர்: சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை நசுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் செயல்படுவதாக திருப்பூர் தொழில் துறையினர் குற்றம்சாட்டுகின்றனர்.
தமிழ்நாடு அனைத்து தொழில் முனைவோர் கூட்டமைப்பு சார்பில், திருப்பூர் டீமா சங்க அலுவலகத்தில் தலைவர் எம்.பி.முத்துரத்தினம், பொது செயலாளர் எம். ஜெயபால், பொருளாளர் எஸ்.கோவிந்தராஜ், துணைத் தலைவர் ஸ்ரீகாந்த் ஆகியோர் கூட்டாக திருப்பூரில் இன்று (நவ. 26) செய்தியாளர்களிடம் பேசியது: ''தமிழ்நாட்டில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் செய்வோர் 90 சதவீதம் இருக்கிறோம். குறிப்பாக திருப்பூரில் சிறிய நிறுவனங்கள் இயங்க முடியாத சூழல் இன்றைக்கு உருவாகிவிட்டது. கடந்த காலத்தில் ஏற்பட்ட மின் கட்டண உயர்வு, மூலப்பொருள் விலையேற்றம், ஜிஎஸ்டி, பணம் மதிப்பு நீக்கம், கரோனா தொற்று, நூல் விலை என பல்வேறு காரணங்களால் தொழிலை தொடர்ந்து செய்ய முடியாமல், 50 சதவீதம் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. பலர் இந்த தொழிலை விட்டு வெளியேறும் நெருக்கடியில் தான் உள்ளனர்.