சென்னை: புழல் சிறையில் செல்போன், கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்கள் சிக்கிய விவகாரத்தில் சிறப்புக் குழு அமைக்கப்பட்டு இருப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் டிஜிபி விளக்கம் அளித்திருக்கிறார். கொலை வழக்கில் கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பன்னா இஸ்மாயில் மற்றும் பிலால் மாலிக் ஆகியோர் சிறைத்துறை அதிகாரிகளால் கடுமையாக தாக்கப்பட்டதாகவும், அவர்களுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் குடும்பத்தினர் மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
அதற்கு மறுப்பு தெரிவித்த கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர், சிறைக்குள் திடீரென சோதனை நடத்தியபோது அவர்களிடமிருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. இதனால் சிறைத்துறை அதிகாரிகள் மீது பன்னா இஸ்மாயிலும், பிலால் மாலிக் மற்றும் பிரகாஷ் ஆகியோர் சேர்ந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இருப்பினும் அவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது என்றார். இதையடுத்து சிறைத்துறை டிஜிபி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஜன.21க்கு தள்ளி வைத்துள்ளனர்.
இந்நிலையில், இன்று இந்த வழக்கின் விசாரணையில், புழல் சிறையில் கஞ்சா, செல்போன் பயன்படுத்தப்பட்ட வழக்கை தொடர்ந்து அதனை கண்காணிக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டு இருப்பதாக உயர்நீதிமன்றத்தில் சிறைத்துறை டிஜிபி விளக்கம் அளிக்கப்பட்டு இருக்கிறது. விசாரணை நடத்த உளவுப்பிரிவு, லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளதாக சிறைத்துறை டிஜிபி விளக்கம் அளித்துள்ளார். சிறைத்துறை டிஜிபியின் விளக்கத்தை அடுத்து வழக்கை ஜனவரி 30ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.
The post சிறையில் செல்போன், கஞ்சா பொருட்கள் சிக்கிய விவகாரம்: சிறப்புக் குழு அமைக்கப்பட்டு இருப்பதாக ஐகோர்ட்டில் விளக்கம் appeared first on Dinakaran.