மதுரை: சிலை கடத்தல் வழக்கின் முக்கிய குற்றவாளியை அப்ரூவராக கையாளுவதே தவறு என ஐகோர்ட் கிளை நீதிபதி கூறியுள்ளார். தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஓய்வு பெற்ற ஐஜி பொன்.மாணிக்கவேல் மீது சிபிஐ தொடர்ந்த வழக்கில், அவர் முன்ஜாமீன் பெற்றார். அவர் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘எனக்கு எதிராக சிபிஐ பதிவு செய்த வழக்கை ரத்து செய்ய வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்த போது, சிபிஐ வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தும், சிபிஐ தரப்பில் கூடுதல் விவரங்களை தாக்கல் செய்யவும் ஐகோர்ட் கிளை உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இந்த மனு நீதிபதி பி.புகழேந்தி முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி, ‘‘சிலை கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியான தீனதயாளன் என்பவரை அப்ரூவராக கையாளுவதே தவறு என தோன்றுகிறது. அவரது வாக்குமூலத்தை வைத்து, வழக்கின் போக்கை கொண்டு செல்வது சரியானது அல்ல’’ என்றார். சிபிஐ தரப்பில், ‘‘பொன்.மாணிக்கவேலால் தாக்கல் செய்யப்பட்ட இரண்டாம் குற்றப்பத்திரிகையிலேயே ஓய்வு பெற்ற டிஎஸ்பி காதர்பாட்ஷா சேர்க்கப்பட்டுள்ளார். அது தொடர்பான வழக்கு சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. மேலும் இரண்டு உத்தரவுகளை சமர்ப்பிக்க அனுமதி வேண்டும்’’ எனக் கூறி வழக்கு தொடர்பான ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து நீதிபதி, மனு மீதான விசாரணையை ஏப். 7க்கு தள்ளி வைத்தார்.
The post சிலை கடத்தல் குற்றவாளியை அப்ரூவராக கையாளுவது தவறு: பொன்.மாணிக்கவேல் வழக்கில் ஐகோர்ட் கிளை கருத்து appeared first on Dinakaran.