சீனா கடந்த 10 ஆண்டுகளாக பேட்டரிகள், ரோபோக்கள், மோட்டார்கள் போன்ற துறைகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. நாம் இந்தத் துறைகளில் பின்தங்கியுள்ளோம் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மக்களவையில் குற்றம்சாட்டினார்.
மக்களவையில் குடியரசுத் தலைவர் உரை மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நேற்று தொடங்கியது. இந்த விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கலந்துகொண்டு பேசியதாவது: இந்தியாவில் தயாரிப்போம் என்ற பெயரிலான மேக் இன் இந்தியா திட்டத்தைப் பிரதமர் மோடி கொண்டு வந்தார். அது நல்ல யோசனை என்று நினைக்கிறேன். ஆனால், 2014-ல் 15.3% ஆக இருந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி, இன்று 12.6% ஆகக் குறைந்துள்ளது. கடந்த 60 ஆண்டுகளில் உற்பத்தியில் இது தான் மிக குறைவானதாகும். இதற்காக நான் பிரதமரைக் குறை கூறவில்லை, அவர் முயற்சிக்கவில்லை என்று கூறுவது நியாயமாக இருக்காது. பிரதமர் முயற்சி செய்தார். ஆனால் அவர் தோல்வியடைந்தார் என்று என்னால் கூற முடியும். இந்தியாவில் தயாரிப்போம் (மேக் இன் இந்தியா) திட்டத்தால் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை.