பெய்ஜிங் : சீன பொருட்களுக்கு 245% இறக்குமதி வரி விதித்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுவரை 145 சதவீதமாக இருந்த இறக்குமதி வரியை 245% ஆக உயர்த்துவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன்படி, அமெரிக்க பொருட்கள் மீது பல்வேறு நாடுகள் அதிக வரி விதிப்பதாகவும், அதற்கு பதிலடியாக அந்தந்த நாடுகளில் இருந்து அமெரிக்கா இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என்றும் அவர் அறிவித்தார். இதனிடையே ஏவுகணை தயாரிப்பு, மின்சார காருக்கு பயன்படுத்தும் அரிய உலோகங்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்ய சீனா தடை விதித்தது.
சீனா நேற்று தடை விதித்ததை தொடர்ந்து அந்நாட்டு பொருட்கள் மீதான வரியை உயர்த்தியது அமெரிக்கா. மேலும் அரிய உலோகத்தை சீனா அனுப்பாததால் அமெரிக்க பாதுகாப்பு துறைக்கு ஏற்பட்டுள்ள இடர்பாடு பற்றி ஆராய டிரம்ப் ஆணை பிறப்பித்தார். உலோகத்துக்கு சீன தடையால் அமெரிக்காவின் பாதுகாப்பு, தொழில்நுட்பம், பொருளாதார வளர்ச்சி என அனைத்தும் பாதிக்கப்படும் என்பதால் சீன பொருட்களுக்கு அதிபர் ட்ரம்ப் 245% வரி விதித்து உத்தரவிட்டார். அமெரிக்காவிற்கும், சீனாவிற்கும் இடையிலான வர்த்தகப் போர் உலகளாவிய பொருளாதாரக் கண்ணோட்டத்தை கடுமையாக பாதிக்கும் என நிபுணர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே ஏற்பட்டுள்ள வர்த்தகப் போர் மற்ற நாடுகளையும் பதட்டம் அடைய செய்துள்ளது.
The post சீன பொருட்களுக்கு 245% இறக்குமதி வரி விதித்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அதிரடி!! appeared first on Dinakaran.