*வனத்துறை நடவடிக்கை
விகேபுரம் : சுற்றுலா பயணிகள், பக்தர்களை கண்காணிக்கும் பொருட்டு முண்டந்துறை வனச்சரகத்திற்குட்பட்ட பாபநாசம் லோயர் டேமில் அமைக்கப்பட்டிருந்த வனச்சோதனை சாவடி திடீரென அகற்றப்பட்டது. மாறாக பாபநாச அணை செல்லும் வழியில் புதிதாக சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.
நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பிரசித்தி பெற்ற அகஸ்தியர் அருவி உள்ளது. இந்த அருவியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் விழுவதால் தினமும் சுற்றுலா பயணிகள் இங்கு வந்து குளித்து மகிழ்கின்றனர்.
அதே போன்று மலைமீதுள்ள காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலில் வார விடுமுறை நாட்கள் மட்டுமின்றி சாதாரண நாட்களில் பக்தர்கள் ஏராளமானோர் வந்து செல்வார்கள். அவ்வாறு வந்து செல்லும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மலைப்பகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள், மதுபாட்டில்கள் கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனவே சுற்றுலா பயணிகளை தீவிரமாக கண்காணிக்கும் வகையில் பாபநாசம் மற்றும் முண்டந்துறை வனச்சரக பகுதிகளில் உள்ள இரண்டு சோதனை சாவடிகள் நீண்ட காலமாக பயன்பாட்டில் இருந்து வருகிறது.
இதில் பாபநாசம் கோயிலில் இருந்து மேற்கு தொடர்ச்சி மலை மீது ஏறும் போது அமைக்கப்பட்டுள்ள பாபநாசம் வனத்துறை சோதனை சாவடியில் ஒவ்வொரு வாகனங்களும் தீவிர சோதனை செய்யப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்த சோதனையில் சுற்றுலா பயணிகள், பக்தர்கள் பிளாஸ்டிக், பாலித்தீன் பொருட்கள் கொண்டு சென்றால் வனத்துறையினர் பறிமுதல் செய்கின்றனர். மதுபாட்டில்கள் இருந்தால் அங்கேயே பறிமுதல் செய்து அழிக்கப்படுகிறது.
மேலும் அகஸ்தியர் அருவிக்கு செல்லும் பக்தர்களிடம் நுழைவு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் முண்டந்துறை வனச்சரகத்தில் லோயர்டேமில் செயல்பட்டு வந்த முண்டந்துறை சோதனை சாவடியில் பக்தர்கள், சுற்றுலா பயணிகளின் வாகன எண்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டு வந்தது. இந்த சோதனை சாவடி மூலம் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு மற்றும் பாபநாசம் அணைக்கு செல்வோரிடம் கட்டணம் வசூலிக்கப்பட்டது.
ஆனால் கோயிலுக்கு செல்வதற்கு கட்டணம் வசூலிக்க தடை மற்றும் அணைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டதால் தற்போது வாகன எண்கள் மட்டுமே பதிவு செய்யப்படுகிறது. எனவே லோயர் டேமில் செயல்பட்டு வந்த முண்டந்துறை வனச்சோதனை சாவடி தற்போது அகற்றப்பட்டுள்ளது.
ஆனால் அதற்குப் பதிலாக காரையார் சொரிமுத்தையனார் கோயில் நுழைவுப் பகுதியை அடுத்து, பாபநாசம் அணைக்கு செல்லும் வழியில் சோ தனை சாவடி அமைத்து வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பாபநாசம் அணைக்கு சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே அங்கு சுற்றுலா பயணிகள், பக்தர்கள் செல்வதை தடுப்பதற்காக சோதனை சாவடி அமைக்கப்பட்டு இருப்பதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
சேர்வலாறு அணைப்பகுதிக்கு செல்வதற்கு சுற்றுலா பயணிகளுக்கு ஏற்கனவே உள்ள கட்டுப்பாடுகள் தொடரும் என்றும், முண்டந்துறை சோதனை சாவடி பகுதியில் அமைந்துள்ள வனச்சரக அலுவலகத்திலிருந்து தொடர் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் வனத்துறையினர் தெரிவித்தனர்.
The post சுற்றுலா பயணிகள், பக்தர்களை கண்காணிக்க அமைக்கப்பட்ட முண்டந்துறை சோதனை சாவடி திடீர் அகற்றம் appeared first on Dinakaran.