காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, பெருமாள் கோயில்களில் சொர்க்க வாசல் நேற்று நள்ளிரவு திறக்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் நேற்று அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இந்த, நன்னாளில் பெருமாளை வழிபட்டால் சொர்க்கத்துக்கு செல்லும் பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். அதனால், ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று பெருமாள் கோயில்கள் குவிந்தனர்.
அந்த வகையில், காஞ்சிபுரம் ரங்கசாமி குளம் அருகிலுள்ள அஷ்டபுஜ பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், பூஜைகள் செய்யப்பட்டது. பெருமாள் ரத்னாங்கி சேவையில் அலங்கரிக்கப்பட்டு, பக்தர்களுக்கு காட்சியளித்தார். அதேபோல, பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில், வைகுண்ட பெருமாள் கோயில்களில் திருப்பணிகள் நடைபெறுவதால் பூஜைகள் எளிமையாக நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து, காஞ்சிபுரம் அழகிய சிங்கபெருமாள் கோயில், பச்ச வண்ண பெருமாள், பவளவண்ண பெருமாள், நிலா தூண்ட பெருமாள் கோயில், ஆதிகேசவ பெருமாள், திருநீரகத்தான் பெருமாள் கோயில், யதோத்தக்காரி பெருமாள் கோயில் என காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 108 பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
இதில், ஏராளமான பக்தர்கள் “கோவிந்தா…, கோவிந்தா…’’ என்று கோஷமிட்டு பெருமாளை வணங்கி சென்றனர். வைகுண்ட ஏகாதசி கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு புளியோதரை, இனிப்பு பொங்கல் அன்னதானங்கள் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. விழா ஏற்பாடுகளை அந்தந்த கோயில் செயல் அலுவலர்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர். ஸ்ரீபெரும்புதூர்: ஒரகடம் அடுத்த வடக்குப்பட்டு கிராமத்தில் பழமையான சுந்தர வரதராஜ பெருமாள் கோயில் இந்துசமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.
இக்கோயிலில் வெள்ளிக்கிழமை வைகுண்ட ஏகாதசி உற்சவம் இங்கு விமரிசையாக கொண்டாடப்பட்டது. உற்சவத்தை முன்னிட்டு சுந்தர வரதராஜ பெருமாளுக்கு அதிகாலை 5 மணிக்கு அபிஷேகம் நடைபெற்றது. காலை 7 மணிக்கு கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி தாயார் சந்நிதி முன்பு பக்தர்களுக்குக் காட்சியருளினார். பலவித தீபாராதனைகள் பெருமாளுக்கு காண்பிக்கப்பட்டன. வேத பண்டிதர்களால் நாலாயிர திவ்ய பிரபந்தம் பாடப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையர் குமரதுரை, உதவி ஆணையர் கார்த்திகேயன் அறிவுரையின்படி கோயில் நிர்வாக அதிகாரி செந்தில்குமார், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் கோதண்டராமன், கோயில் அறங்காவலர் வெங்கடகிருட்டிணன் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர். செங்கல்பட்டு: சிங்கபெருமாள் கோவில் பகுதியில் அஹோபிலவல்லி தாயார் உடனுறை பாடலாத்ரி நரசிம்மபெருமாள் கோயில் உள்ளது. இக் கோயிலில் ஆண்டு தோறும் வைகாசி மாதத்தில் பிரம்மோஸ்சவம் 10 நாட்களும் அதனைத்தொடர்ந்து மூன்று நாட்கள்விடையாற்றி விழாவும் விமரிசையாக நடைபெறும்.
அதனை தொடர்ந்து மார்கழி மாதத்தில்அதிகாலையில் பிரம்ம முகூர்த்தத்தில் சொர்க்கவாசல் திறக்கப்படுவது வழக்கம். அதனடிப்படையில் சிங்கபெருமாள் கோயில் அகோபிலவள்ளி தாயார் சமேத ஸ்ரீபாடலாத்ரி நரசிம்மர் பெருமாள் கோயிலில் பரமபத வாசல் என்று அழைக்கப்படும். சொர்க்க வாசல் அதிகாலை 4.20 மணிக்கு திறக்கப்பட்டது. பக்தர்கள் அனைவரும் கோவிந்தா… கோவிந்தா… என பெருமாளை பக்தி கோஷமிட்டவாறு பெருமானை தரிசித்தனர். நடை திறப்புக்கு பின்னர், பின்னர், திருத்தேரில் அகோபில வள்ளி தாயாரும் நரசிம்ம பெருமானும் வெளிபிரகாரத்தில் அலங்காரத்தோடு எழுந்தருளி காட்சியளித்தார்.
இதற்கு முன்னதாக நள்ளிரவு 1 மணிமுதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் 2 கிலோமீட்டர் தூரம் வரை நீண்ட வரிசையில் நின்று சொர்க்க வாசல் வழியாக சென்று பெருமாளை தரிசனம் செய்து வழிபட்டனர். மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் உள்ள தலசயன பெருமாள் பெருமாள் கோயில் உலக பிரசித்தி பெற்ற கோயிலாகும். இக்கோயில், 108 திவ்ய தேசங்களில் 63வது திவ்ய தேசமாக திகழ்ந்து வருகிறது. இந்த கோயிலில், வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நேற்று அதிகாலை 5.18 மணிக்கு நடந்தது.
முன்னதாக, வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்கவாசல் கதவுகள், கோயில் மண்டபம், மலர்கள் மற்றும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட சொர்கவாசல் வழியாக வெளியே வந்து கோயில் மண்டபத்தில் முத்தங்கி அலங்காரத்தில் தலசயன பெருமாள் ஸ்ரீதேவி-பூதேவியுடன் அருள்பாலித்தார். இதில், அதிகாலையிலேயே ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து கோவிந்தா… கோவிந்தா… கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.
தொடர்ந்து, பெருமாள் ஸ்ரீதேவி-பூதேவியுடன் வீதியுலா வந்தார். நிகழ்ச்சியில், கோயில் (பொ) செயல் அலுவலர் செல்வகுமார், உபயதாரர் சரளாகுமார், மேலாளர் சந்தானம், கிராமத்தார் உள்ளிட்ட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இதேபோல், 108 திவ்ய தேசங்களில், 62வது திவ்ய தேசமாக திகழும் மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தை நித்யகல்யாண பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, சொர்கவாசல் திறப்பு விழா விமரிசையாக நடந்தது.
முன்னதாக, நள்ளிரவு 12 மணியளவில் இருந்து அதிகாலை 2 மணி வரை பிரகார மண்டபங்களுக்கு பூ அலங்காரம் செய்யப்பட்டு, அதிகாலை 5.18 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. நிகழ்ச்சியில், செயல் அலுவலர் சரவணன், மேலாளர் மூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். குன்றத்தூர்: திருநீர்மலையில் ரெங்கநாத பெருமாள் கோயில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது.
இதனையொட்டி, அதிகாலை 4.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, மங்கள வாத்தியங்கள் இசைக்க, வேத மந்திரங்கள் முழங்க, பெருமாள் மற்றும் தாயாருக்கு சிறப்பு வஸ்திரங்கள் அணிவிக்கப்பட்டு, பலவர்ண மலர்களால் அர்ச்சனை செய்யப்பட்டது.தொடர்ந்து ரெங்கநாத பெருமாள், ஸ்ரீதேவி – பூதேவி சமேதமாக புறப்பட்டு சொர்க்கவாசல் அடைந்தார். அங்கு, பெருமாள் மற்றும் தாயாருக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அப்போது, கோவிந்தா… கோவிந்தா… என்ற கோஷம் முழங்க, பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
* அஷ்டபுஜ பெருமாள் கோயிலில் 5 ஆண்டுக்கு பிறகு வாசல் திறப்பு
காஞ்சிபுரம் ரங்கசாமி குளம் அருகில் 108 வேலை தேசங்களில், 44வது திவ்ய தேசமாக விளங்கும் ஸ்ரீ புஷ்பவல்லி தாயார் சமேத ஸ்ரீ அஷ்டபுஜ பெருமாள் கோயிலில், 5 ஆண்டுகளுக்கு பிறகு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நேற்று கோலாகலமாக நடைபெற்றது. வெள்ளி தகடுகளாலான கதவில் திறக்கப்பட்டு, அஷ்டபுஜ பெருமாள் பரமபத வாசல் வழியாக வருகை தந்து, பக்தர்களுக்கு காட்சியளித்தார். சொர்க்க வாசல் திறப்பையொட்டி, முதல் முறையாக அஷ்டபுஜ பெருமாள் ரத்னாங்கி சேவையில் காட்சி காட்சியளித்தார்.
கோயில் முழுவதும் டன் கணக்கில் பூக்கள் மற்றும் படங்களை அலங்கரிக்கப்பட்டு, நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் சொர்க்கவாசல் திறப்புக்கு பக்தர்கள் நள்ளிரவு முதலே காத்திருந்து, அதிகாலை 5 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பிற்குபின், ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
பல்வேறு பகுதியில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவதால், கோயில் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விழாவில் காஞ்சிபுரம் மண்டல குழு தலைவர் சாந்தி சீனிவாசன், தலைமை செயற்குழு உறுப்பினர் எஸ்.கே.பி.சீனிவாசன், அறங்காவலர் குழு தலைவர் எஸ்.கே.பி.எஸ்.சந்தோஷ் குமார், செயல் அலுவலர் ராஜமாணிக்கம், பட்டாச்சாரியார் கமலக்கண்ணன் உள்ளிட்ட விழா குழுவினர் செய்திருந்தனர்.
The post செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பெருமாள் கோயில்களில் சொர்க்க வாசல் திறப்பு: கோவிந்தா… கோவிந்தா… என முழங்கி பக்தர்கள் சாமி தரிசனம் appeared first on Dinakaran.