சென்னை: ஐஎஸ்எல் 2024-25-ம் ஆண்டு சீசனில் நேற்று சென்னை நேரு விளையாட்டரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி – ஈஸ்ட் பெங்கால் அணிகள் மோதின. முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகள் தரப்பில் கோல் ஏதும் அடிக்கப்படவில்லை. 54-வது நிமிடத்தில் ஈஸ்ட் பெங்கால் அணியின் விஷ்ணு பூதியா, கோல்கம்பத்துக்கு மிக நெருக்கமாக நின்றபடி அடித்த ஷாட் கோல் வலையின் மையப்பகுதியை துளைத்தது. இதனால் ஈஸ்ட் பெங்கால் 1-0 என முன்னிலை பெற்றது.
84-வது நிமிடத்தில் ஈஸ்ட் பெங்கால் அணியின் ஜேக்சன் சிங், பாக்ஸ் பகுதிக்கு வெளியே இருந்து அடித்த ஷாட் கோல் வலையின் இடதுபுற கார்னரை துளைத்தது. இதனால் ஈஸ்ட் பெங்கால் அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிடங்களின் முடிவில் ஈஸ்ட் பெங்கால் 2-0 என முன்னிலையில் இருந்தது. இதன் பின்னர் காயங்களுக்கு இழப்பீடாக 6 நிமிடங்கள் வழங்கப்பட்டது. இதில் போராடிய போதிலும் சென்னையின் எஃப்சி அணியால் கோல் அடிக்க முடியாமல் போனது. முடிவில் ஈஸ்ட் பெங்கால் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.