சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் உதயநிதி ஸ்டாலினுடன், மாற்றுத்திறனாளிகள் சந்தித்து பேசினர். அப்போது திமுகவில் புதிதாக மாற்றுதிறனாளிகளுக்காக தனி அணியை உருவாக்க கோரிக்கை விடுத்தனர். திமுக இளைஞர் அணி செயலாளரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலினை சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்க மாநில தலைவர் ரெ.தங்கம் தலைமையில் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் மற்றும் சங்கப் பிரதிநிதிகள் நேரில் சந்தித்து பேசினர். அப்போது தமிழ்நாட்டில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் நியமன முறையில் 13,988 மாற்றுதிறனாளிகள் உறுப்பினர்களாக நியமிக்க வகை செய்யும் சட்ட மசோதாவை நிறைவேற்றியமைக்காக நன்றி தெரிவித்தனர்.
மேலும், தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாற்றுத்திறனாளிகள் சங்கங்களை ஒருங்கிணைத்து நன்றி பாராட்டு மாநாடு நடத்திட தேதியும் கேட்டுக்கொண்டனர். இந்நிலையில் திமுகவில் 23 சார்பு அணிகளுக்கு மேல் உள்ள நிலையில், லட்சத்துக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் திமுகவில் பயணிக்கிறார்கள். அவர்களையும் கவுரவப்படுத்தும் விதமாக திமுகவில் மாற்றுத்திறனாளிக்கு தனி அணி உருவாக்கிட வேண்டும் என்று துணை முதல்வரிடம் உதயநிதி ஸ்டாலினிடம் மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் ரெ.தங்கம் கோரிக்கை மனு வழங்கி வலியுறுத்தினார்.
The post சென்னை அண்ணா அறிவாலயத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுடன் மாற்றுத்திறனாளிகள் சந்திப்பு: கட்சியில் மாற்றுத்திறனாளிகள் அணி உருவாக்க கோரிக்கை appeared first on Dinakaran.