சென்னையில் உணவகங்களில் இட்லி, தோசை உள்ளிட்ட அனைத்தின் விலையும் ஐந்து ரூபாய் முதல் பத்து ரூபாய் வரை உயர்ந்துள்ளது.
சென்னை மாநகரத்தை பொறுத்தவரை, வேலைநிமித்தமாகவும், படிப்புக்காகவும் வந்து தங்கியிருப்பவர்கள் பலரும் உணவுக்காக பெரிதும் நம்பியிருப்பது நடுத்தர விலையுள்ள உணவகங்களைத் தான். ஆனால், அண்மைக்காலமாக இங்கும் உணவு வகைகளின் விலை உயர்த்தப்பட்டு வருகின்றது. இட்லி, தோசை, பொங்கல், பூரி, சப்பாத்தி தொடங்கி, நெய்தோசை, வெங்காய தோசை என அனைத்துவகை உணவுகளும் குறைந்தபட்சம் 2 ரூபாய் முதல் அதிகபட்சம் 10 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது. எரிவாயு விலை உயர்வு, மளிகைப்பொருட்கள் விலை அதிகரிப்பு என பல்வேறு காரணங்களால், வேறு வழியின்றி விலை உயர்த்தப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள் உணவக உரிமையாளர்கள்.
விலை உயர்த்தியும் தங்களால் செலவுகளை கட்டுப்படுத்த முடியவில்லை என்பது உணவக உரிமையாளர்களின் தரப்பாக இருக்கிறது. இனி உணவகங்களில் சாப்பிடப்போனால், வயிறு நிறைகிறதோ இல்லையோ, மக்களின் பணம் கரைந்துவிடும் என்பது சாமானியர்களின் எண்ணமாக இருக்கிறது.