சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் சூழல் மன்றங்கள் ஏற்படுத்தப்படும் என்று காலநிலை உச்சி மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இயற்கை வளங்களை பாதுகாக்க அக்கறை கொண்ட சமூகமாக மாற வேண்டும். காலநிலை கல்வி அறிவுக்கென ஒரு கொள்கையை தமிழ்நாடு அரசு விரைவில் அறிவிக்க உள்ளது.
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் காலநிலை உச்சி மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். காலநிலை மாற்றம் உலகத்திற்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக மாறி வருகிறது. காலநிலை மாற்றத்தின் பாதிப்புகளை கட்டுப்படுத்தவும், காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை குறைக்கவும் தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம், பசுமை தமிழக இயக்கம் மற்றும் தமிழ்நாடு சதுப்பு நிலை இயக்கம் ஆகிய மூன்று இயக்கங்களை தமிழ்நாடு அரசு ஏற்படுத்தி உள்ளது.
இந்த உச்சி மாநாடு இன்றும் நாளையும் என 2 நாட்கள் நடைபெறுகிறது. தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுச்சூழல் விருதுகளை வழங்கி பல்வேறு புதிய திட்டங்களை தொடங்கி வைத்தார். மேலும் கழிவுகளை மறுசுழற்சி செய்வதற்கான இணையதளம், தொழிற்சாலை பசுமை குறியீடு போன்ற திட்டங்களை தொடங்கி வைத்தார்.
இந்தியாவிலேயே காலநிலை மாற்றம் குறித்து ஆராய மாநாடு நடத்தியது தமிழ்நாடு மட்டும்தான். காலநிலை மாற்றம் குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். வெப்ப அலையை தணிக்க குடிநீர் பந்தல்கள் அமைக்க மாநில பேரிடர் நிதியை பயன்படுத்த அனுமதித்துள்ளோம். வெப்ப அலையை மாநில பேரிடராக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது
வயநாடு நிலச்சரிவு, திருவண்ணாமலை மண்சரிவை நாம் மறக்க முடியாது. இவை அனைத்திற்கும் காலநிலை மாற்றம் தான் காரணம், அதனை நாம் எதிர்கொள்ள வேண்டும். காலநிலை மாற்றம் தொடர்பான விழிப்புணர்வு மிகவும் அவசியம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியுள்ளார்
The post சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் காலநிலை உச்சி மாநாட்டை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! appeared first on Dinakaran.