சென்னை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் மாவட்ட அளவிலான அறிஞர் அண்ணா மிதிவண்டிப் போட்டிகளை அமைச்சர் சேகர் பாபு கொடியசைத்து தொடங்கி வைத்த்தார். ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15ம் நாள் காலஞ்சென்ற தமிழக முதல்வர் பேரறிஞர் அண்ணாவுன் பிறந்த நாளினை சிறப்பிக்கும் வகையில் அண்ணா மிதிவண்டிப் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் அண்ணா மிதிவண்டிப் போட்டி ஆறு பிரிவுகளாக இன்று சென்னை, சுவாமி சிவானந்தா சாலையில் உள்ள தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிலையம் அருகில் துவங்கி நேப்பியர் பாலம், தீவுத்திடல், காயிதே இ மில்லத் பாலம் இடதுபுறம் அண்ணா சாலை வழியாக சென்று மீண்டும் சுவாமி சிவானந்தா சாலை தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிலையம் வரை முடிவடைந்தது.
இவ்விளையாட்டுப் போட்டிகளை இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சென்னை சுவாமி சிவானந்தா சாலையில் தொடங்கி வைத்தார். இந்த விளையாட்டு போட்டிகளில் 13 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவிகளும், 15 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவிகளும் மற்றும் 17 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டனர். 2024-25 ம் ஆண்டிற்கான அறிஞர் அண்ணா மிதிவண்டிப் போட்டியில் வெற்றி பெற்ற 2,830 வீரர், வீராங்கனைகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது. ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடம் பெற்றவர்களுக்கு ரூ. 5000, இரண்டாம் இடம் பெற்றவர்களுக்கு ரூ. 3000, மூன்றாம் இடம் பெற்றவர்களுக்கு ரூ. 2000, மற்றும் நான்கு முதல் பத்து இடங்களில் வந்தவர்களுக்கு ரூ. 250 வழங்கப்பட்டது. இந்நிகழ்வின்போது, மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அலுவலர் ஆண்டனி, வருவாய் கோட்டாட்சியர் இப்ராஹிம், மண்டல அலுவலர் டாக்டர் தா. ஃபரிதா பானு உட்பட பலர் கலந்து கொண்டனர்.
The post சென்னை மாவட்ட அளவிலான அறிஞர் அண்ணா மிதிவண்டிப் போட்டிகள்: அமைச்சர் சேகர் பாபு கொடியசைத்து துவக்கி வைத்தார் appeared first on Dinakaran.