சென்னை: ஒன்றிய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால் தலைமையில், பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ. வேலு சிறப்பு விருந்தினராக பங்கு பெற்ற எண்ணூர் காமராஜர் துறைமுகத்தின் வெள்ளிவிழா கூட்டம் இன்று (7.12.2024) சென்னை லீலா பேலஸ் அரங்கத்தில் நடைபெற்றது.
விழாவில் பங்குபெற்ற ஒன்றிய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால் அவர்கள், சென்னை துறைமுக ஆணையம் மற்றும் காமராஜர் துறைமுக நிறுவன தலைவர் சுனில் பாலிவால், காமராஜர் துறைமுக நிறுவன துணை தலைவர் G. விஸ்வநாதன், காமராஜர் துறைமுக நிறுவன மேலாண் இயக்குநர் Smt. J.P. ஐரின் சிந்தியா, திரைப்பட நடிகை ஆண்ட்ரியா ஜெரெமையா, ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பள்ளிக்கல் மற்றும் ஒன்றிய மற்றும் மாநில அரசு அலுவலர்கள் அனைவரையும் வரவேற்று தனது உரையை தொடங்கினார்.
பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ. வேலு உரையாற்றுகையில், எண்ணூர் காமராஜர் துறைமுகத்தின் வெள்ளிவிழாவில் பங்கேற்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்து, அக்டோபர் 1999இல், எண்ணூர் துறைமுகம் அதாவது காமராஜர் துறைமுகம் இந்தியாவின் 12வது பெரிய துறைமுகமாக அறிவிக்கப்பட்டது என்பதை குறிப்பிட்ட அமைச்சர் அவர்கள், பெரிய துறைமுகமாகிய சென்னை துறைமுகத்தின் நெரிசலைக் குறைக்கவும், சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கவும், நமது மதிப்பிற்குரிய தலைவர் அன்றைய முதல்வர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள், ஒன்றிய அரசை வலியுறுத்தி சென்னையின் வடக்கே துறைமுக வளர்ச்சிக்கு தேவையான நிலம் தமிழக அரசால் கையகப்படுத்தப்பட்டு துறைமுகத்திடம் ஒப்படைக்கப்பட்டது என்று தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசு மற்றும் அப்போதைய மத்திய அமைச்சர்கள் முரசொலிமாறன் மற்றும் டி.ஆர்.பாலு ஆகியோரின் தொடர்ச்சியான ஆதரவுடன், துறைமுகம் 2001 ஆண்டு பிப்ரவரி-1 அன்று செயல்பட தொடங்கி, அப்போதைய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் மற்றும் அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது.
இந்த துறைமுகம் கடந்த 25 ஆண்டுகளாக சாலை, இரயில் இணைப்புகளுடன் மாநில அரசின் ஆதரவுடன் அதன் செயல்பாடுகள் வெற்றிகரமாக இருப்பதைக் குறிப்பிட்ட அமைச்சர் அவர்கள், இத்துறைமுகம் பொன்விழா கொண்டாடும் வகையில் வளர்ச்சி பெறும் என்பதில் சந்தேகம் இல்லை என தெரிவித்தார்.
இந்த துறைமுகம் அமைந்துள்ள காட்டுப்பள்ளி முதல், கல்கத்தா சாலை, பெங்களூர் சாலை, திருச்சி சாலை கடந்து மாமல்லபுரம் வரை அதாவது, கிழக்கு கடற்கரை சாலையை இணைக்கும் வகையில் சென்னை வெளிவட்ட எல்லைச் சாலை (CPRR) அமைக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.
134 கி.மீ. நீளத்தில் ரூ.16, 212 கோடி மதிப்பீட்டில் சாலை கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணியை முதலமைச்சர் தனி கவனம் செலுத்தி விரைவாக முடிக்க அறிவுறுத்தியுள்ளதாக தெரிவித்தார்.
இச்சாலை பணிகள் முடிவுற்றவுடன், இத்துறைமுகம் தமிழகத்தின் பிற பகுதிகள் மற்றும் அண்டை மாநிலங்களுடன் கூடுதல் இணைப்பை பெற்று வெற்றிகரமாக செயல்படும். 2023-2024 ஆம் ஆண்டில் சுமார் 45 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளை கையாண்ட காமராஜர் துறைமுகத்தின் அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களைப் பாராட்டிய அமைச்சர் அவர்கள், ஆற்றல் மிக்க தலைவர், தமிழ்நாட்டின் முதலமைச்சர் அவர்களின் தலைமையில் தமிழ்நாடு அரசு, துறைமுகங்கள் மற்றும் கடல்சார் துறையின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கு உறுதிபூண்டுள்ளது என்றும், எண்ணூர் காமராஜர் துறைமுகத்தின் வெள்ளிவிழா கொண்டாட்டங்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டதாக தெரிவித்தார்.
மேலும், இந்த மிக முக்கியமான நிகழ்ச்சிக்கு அழைத்ததற்காக மத்திய அமைச்சர் திரு சர்பானந்தா சோனோவால் ஜி அவர்களுக்கு தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டார். தனிமரம் தோப்பாகாது, அனைத்து மரங்களும் ஒன்று சேர்ந்தால்தான் தோப்பாகும் இதைப் போல இத்துறைமுக வளர்ச்சிக்கு பாடுபட்ட அனைத்து அலுவலர்களுக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்பது பழமொழி, இதற்கேற்ப இத்துறைமுக வளர்ச்சி பெற்று இருந்தால் தான் பலநாடுகளுக்கும் சென்று பொருள் ஈட்ட முடியும் என்பதை குறிப்பிட்டு, இத்துறைமுகம் மென்மேலும் வளர்ச்சி பெற வேண்டும் என தெரிவித்தார். கடந்த 25 ஆண்டுகளாகவும், எதிர்காலத்திலும் இந்தத் துறைமுகம் வெற்றிகரமாகச் செயல்படுவதற்காக பாடுபட்ட ஒன்றிய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர், சென்னை துறைமுக ஆணையம் மற்றும் காமராஜர் துறைமுக நிறுவன தலைவர், காமராஜர் துறைமுக நிறுவன மேலாண் இயக்குநர், காமராஜர் துறைமுக நிறுவன துணை தலைவர் மற்றும் ஒட்டுமொத்த குழுவையும் வாழ்த்தி உரையை நிறைவு செய்தார்.
இந்த வெள்ளிவிழா கூட்டத்தில் ஒன்றிய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால் அவர்கள், சென்னை துறைமுக ஆணையம் மற்றும் காமராஜர் துறைமுக நிறுவன தலைவர் சுனில் பாலிவால், காமராஜர் துறைமுக நிறுவன துணை தலைவர் G. விஸ்வநாதன், காமராஜர் துறைமுக நிறுவன மேலாண் இயக்குநர் Smt. J.P. ஐரின் சிந்தியா, திரைப்பட நடிகை ஆண்ட்ரியா ஜெரெமையா, ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பள்ளிக்கல் மற்றும் ஒன்றிய மற்றும் மாநில அரசு அலுவலர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.
The post சென்னை லீலா பேலஸ் அரங்கத்தில் நடைபெற்ற எண்ணூர் காமராஜர் துறைமுகத்தின் வெள்ளிவிழா கூட்டம் appeared first on Dinakaran.