1. வேளாண்மை-உழவர் நலத்துறையின் அனைத்துத் திட்டங்களையும் ஆலோசனைகளையும், தரமான வேளாண் இடுபொருட்களையும் விவசாயிகள் ஒரே இடத்தில் பெற்றுப் பயனடைய ஏதுவாக ஏழு ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையங்கள், 25 கோடியே 3 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்படும்.
வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகம், வேளாண்மைப் பொறியியல் ஆகிய துறைகளின் திட்டங்கள் குறித்த விபரங்களையும், துறை சார்ந்த ஆலோசனைகளையும் ஒரே குடையின் கீழ் விவசாயிகளுக்கு வழங்குவதற்கும் முக்கியப் பயிர்களின் சான்றளிக்கப்பட்ட விதைகள் உள்ளிட்ட வேளாண் இடுபொருட்களை விவசாயிகளுக்கு எளிதில் விநியோகிக்கவும் வட்டார அளவில்
ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக, 2025-26 ஆம் ஆண்டில், விழுப்புரம் மாவட்டம் மயிலம், கண்டமங்கலம், விருதுநகர் மாவட்டம் திருச்சுழி, புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி, கன்னியாகுமரி மாவட்டம் மேல்புரம், இராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர், கிருஷ்ணகிரி மாவட்டம் தளி ஆகிய ஏழு இடங்களில் 250 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட விதை சேமிப்புக் கிடங்குகளுடன் கூடிய ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையங்கள் 25 கோடியே 3 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்படும்.
2. இரசாயன உரங்களின் தரத்தினை ஆய்வு செய்து விவசாயிகளுக்குத் தரமான உரங்கள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் திருநெல்வேலி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு உரக்கட்டுப்பாட்டு ஆய்வகம் ஆறு கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்.
தமிழ்நாட்டில் பயிர் சாகுபடிக்குப் பயன்படுத்தப்படும் இரசாயன உரங்களை ஆய்வு செய்து அவற்றின் தரத்தினை உறுதி செய்யும் வகையில் ஆண்டுக்கு சுமார் 27,000 உர மாதிரிகள் எடுக்கப்பட்டு 17 உரக்கட்டுப்பாட்டு ஆய்வகங்களில் பகுப்பாய்வு செய்யப்படுகின்றன. இந்தப் பகுப்பாய்வுப் பணிகளை மேலும் அதிகரித்து தரமான உரங்களை விவசாயிகளுக்குக் கிடைக்கச் செய்யும் நோக்கத்துடன், 2025-26ஆம் ஆண்டில், திருநெல்வேலி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு உரக் கட்டுப்பாட்டு ஆய்வகம் ஆறு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்படும.
3. வேளாண் விளைபொருள்களில் அறுவடைக்குப் பின் ஏற்படும் இழப்பினைக் குறைத்து சேமிப்புக் காலத்தை நீட்டிக்கும் வகையில் திசையன்விளை, மானாமதுரையில் குளிர்பதனக் கிடங்கு வசதிகள் நான்கு கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் உற்பத்தியாகும் நெல்லி, முருங்கை, மாம்பழம், பயறுவகைகள், சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உற்பத்தியாகும் மிளகாய் மற்றும் இதர காய்கறிகள் போன்ற வேளாண் விளைபொருட்களைச் சேமித்து இருப்புக் காலத்தை நீட்டித்து ஏற்றுமதி வாய்ப்பினை உருவாக்கி விவசாயிகளுக்கு உரிய விலை கிடைத்திட ஏதுவாக, 2025-26ஆம் ஆண்டில், திசையன்விளை, மானாமதுரையில், தலா 200 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட இரண்டு குளிர்பதனக்கிடங்குகள் நான்கு கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
4. தரமான விதைகள் உள்ளிட்ட வேளாண் இடுபொருட்கள் விவசாயிகளுக்கு அருகாமையில் கிடைக்கச் செய்யும் வகையில் குறுவட்ட அளவில் செயல்படும் ஐந்து துணை வேளாண்மை விரிவாக்க மையங்களுக்கு மூன்று கோடியே 58 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் விதை சேமிப்புக் கிடங்குகளுடன் கூடிய புதிய கட்டடங்கள் அமைக்கப்படும்.
குறுவட்ட அளவில் செயல்பட்டுவரும் துணை வேளாண்மை விரிவாக்க மையங்களில் நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய்வித்துப்பயிர்களின் உயர்விளைச்சல் இரகங்களின் சான்றளிக்கப்பட்ட விதைகள் மற்றும் இதர முக்கிய வேளாண் இடுபொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.
2025-26ஆம் ஆண்டில், திருவாரூர் மாவட்டம் இடும்பாவனம், திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர், திருவள்ளூர் மாவட்டம் போந்தவாக்கம், தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சாவூர் டவுன், ஈரோடு மாவட்டம் கள்ளிப்பட்டி ஆகிய 5 இடங்களிலுள்ள துணை வேளாண்மை விரிவாக்க மையங்களுக்கு, 110 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட விதை சேமிப்புக் கிடங்குகளுடன் கூடிய புதிய கட்டடங்கள் மூன்று கோடியே 58 இலட்சம் ரூபாய் ஒன்றிய, மாநில நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்படும்.
5. வேளாண்மைப் பொறியியல் துறையின் இயந்திரங்களைப் பாதுகாப்பாக வைத்து, வட்டார அளவில் விவசாயிகளுக்கு சேவை வழங்கிட ஏதுவாக வேளாண் இயந்திரக் கூடாரங்கள் 15 வட்டாரங்களில் மூன்று கோடியே 30 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படும்.
விவசாயிகள் பல்வேறு வேளாண் பணிகளைக் காலத்தே மேற்கொள்ள உதவிடும் வகையில், வேளாண்மைப் பொறியியல் துறையின் வேளாண் இயந்திரங்கள், உபகரணங்கள் வட்டார அளவில் உழவர்களுக்கு இ-வாடகை செயலியின் மூலம் குறைந்த வாடகைக்கு வழங்கப்பட்டு வருகின்றன. அவ்வியந்திரங்களையும், உபகரணங்களையும் பாதுகாப்பாக வைக்கவும், பழுதுகள் ஏற்படின் அவற்றை உடனுக்குடன் நிவர்த்தி செய்யவும், 2025-26ஆம் ஆண்டில், 15 வட்டாரங்களில் வேளாண் இயந்திரக் கூடாரங்கள் ஒவ்வொன்றும் ரூபாய் 22 இலட்சம் வீதம் மொத்தம் மூன்று கோடியே 30 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
6. தமிழ்நாட்டில் உள்ள 386 ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையங்களில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் சேவைகளை மேம்படுத்தவும் அவற்றைக் கண்காணிக்கவும் கண்காணிப்புக் கேமராக்கள் மற்றும் மின்னணு வருகைப் பதிவேடு இயந்திரங்கள் இரண்டு கோடியே 50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படும்.
தமிழ்நாட்டில் செயல்படும் 386 ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையங்களில் வேளாண் பயிர் இரகங்களின் தரமான சான்றுபெற்ற விதைகள், உயிர் உரங்கள் உள்ளிட்ட முக்கிய வேளாண் இடுபொருட்கள் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்படுவதுடன், அரசின் திட்டங்கள் குறித்த விவரங்களும், வேளாண் தொழில்நுட்ப ஆலோசனைகளும் விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றன.
எனவே, 386 ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையங்களில் விவசாயிகளுக்குக் கிடைத்திடும் வேளாண் விரிவாக்க சேவையை மேம்படுத்தவும் அதனைத் திறம்படக் கண்காணிக்கவும் ஏதுவாக, 2025-26ஆம் ஆண்டில் கண்காணிப்புக் கேமராக்கள் மற்றும் மின்னணு வருகைப் பதிவேடு இயந்திரங்கள் இரண்டு கோடியே 50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படும்.
7. விவசாயிகளுக்குத் தரமான உயிரியல் பூச்சிக்கொல்லிகள் கிடைப்பதை உறுதி செய்திடும் வகையில், தஞ்சாவூரில் இயங்கிவரும் உயிரியல் பூச்சிக்கொல்லி உற்பத்தி மையத்தில் புதிய கட்டடம் ஒரு கோடியே 85 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்படும்.
இயற்கை வேளாண்மையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு, பயிர்களில் அவ்வப்போது ஏற்படும் பூச்சி, நோய்த் தாக்குதல்களைக் கட்டுப்படுத்திட, போதுமான அளவு தரமான உயிரியல் பூச்சிக்கொல்லிகள் கிடைப்பதை உறுதி செய்திடும் வகையில், 2025-26ஆம் ஆண்டில், தஞ்சாவூரில் செயல்பட்டுவரும் உயிரியல் பூச்சிக்கொல்லி உற்பத்தி மையத்தின் செயல்பாடுகளை வலுப்படுத்த புதிய கட்டடம், ஒரு கோடியே 85 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் கட்டப்படும்.
8. காய்கறி நாற்றுகளை அதிக அளவில் உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்கும் பொருட்டு தோட்டக்கலைத் துறையின் மூலம் ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் நாற்றங்கால் கட்டமைப்புகள் விரிவுபடுத்தப்படும்.
விவசாயிகளுக்குத் தரமான காய்கறி நாற்றுகளை உற்பத்தி செய்து தங்குதடையின்றி வழங்குவதற்காகவும், ஆண்டுதோறும் தரமான காய்கறி நாற்றுகள் இருப்பினை உறுதி செய்திடவும் அரசு தோட்டக்கலைப் பண்ணைகளில் நாற்றங்கால் கட்டமைப்புகளை அமைப்பது இன்றியமையாததாகும். ஆண்டு முழுவதும் குழித்தட்டு காய்கறி நாற்றுகளை விவசாயிகளுக்குச் சீராக வழங்குவதற்காக, 2025-26ஆம் ஆண்டில், திண்டுக்கல், திருப்பூர் செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் தோட்டக்கலைத் துறையால் ஒரு கோடி ரூபாய் நிதியில் நான்கு உயர் தொழில்நுட்ப நாற்றங்கால்கள் அமைக்கப்படும்.
9. அதிக வரத்துக் காலங்களில் மாம்பழங்கள் வீணாவதைத் தடுத்து, விவசாயிகள் அதிக வருமானம் பெற ஏதுவாக, வங்கிக்கடன் உதவியுடன் மாம்பழக் கூழ் தயாரிப்புக் கூடம் அமைக்க எட்டு நபர்களுக்கு தலா ரூ.12.25 இலட்சம் வீதம் மானியம் வழங்க 98 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
தமிழ்நாட்டில் மாம்பழ உற்பத்திப் பருவத்தில், அதிக வரத்தின்போது விலை குறைவதோடு, பழங்கள் வீணாகும் நிலை ஏற்படுகிறது. மேலும், தமிழ்நாட்டில் விளையும் மாம்பழ இரகங்களிலிருந்து தயாரிக்கப்படும் மாம்பழக் கூழ், உலகளவில் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. எனவே, 2025-26ஆம் ஆண்டில், வங்கிக்கடன் உதவியுடன், மாம்பழக் கூழ் தயாரிப்புக் கூடம் அமைத்திட எட்டு தொழில்முனைவோருக்கு 35 சதவீத மானியம், அதிகபட்சமாக ஒரு நபருக்கு 12.25 இலட்சம் ரூபாய் வரை மானியம் வழங்கப்படும். இத்திட்டத்திற்கென, 98 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
10. விவசாயிகளின் வயல்களுக்கு நேரடியாகச் சென்று மண் மாதிரிகளைச் சேகரித்து, ஆய்வு செய்து மண்வள அட்டைகளுடன், பயிர்களுக்கேற்ப உரப்பரிந்துரைகள் வழங்கும் வகையில் 75 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய நடமாடும் மண்பரிசோதனை நிலையம் சேலம் மாவட்டத்தில் அமைக்கப்படும்.
தமிழ்நாட்டில் வேளாண்மைத்துறையின் கீழ் செயல்பட்டுவரும் நடமாடும் மண் பரிசோதனை நிலையங்கள், கிராமங்களுக்கே நேரடியாகச் சென்று, விவசாயிகளின் வயல்களில் மண் மாதிரிகளைச் சேகரித்து, ஆய்வு செய்து மண்வள அட்டைகளுடன், பயிர்களுக்கேற்ப உரப்பரிந்துரைகளையும் விவசாயிகளுக்கு வழங்குகின்றன. 2025-26ஆம் ஆண்டில், சேலம் மாவட்ட விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, புதிய நடமாடும் மண்பரிசோதனை நிலையம், சேலம் மாவட்டத்தில் 75 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்படும்.
11. சிறு, குறு விவசாயிகளின் சிறிய இயந்திரங்களுக்கான தேவையினைக் கருத்தில் கொண்டு, புதிய, நவீன வேளாண் இயந்திரங்கள், கருவிகள், உபகரணங்களை அரசு இயந்திரக் கலப்பை பணிமனைகளில் உருவாக்கி, அவை குறித்து விவசாயிகளுக்குச் செயல் விளக்கங்கள் அளிக்கப்படும். இதற்கென 30 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
இணையதளங்களில் புதிய வேளாண் இயந்திரங்கள், கருவிகள், உபகரணங்களின் பயன்பாடுகள் குறித்த பல்வேறு தகவல்கள் கிடைக்கப் பெறுகின்றன. இத்தகைய புதிய, நவீன வேளாண் இயந்திரங்கள், கருவிகள், உபகரணங்கள், பண்ணைக் குட்டைகளிலிருந்து பாசனத்திற்கான நீரினை இறைத்திட உழவர்களுக்கு உதவிடும் வகையில், “டிராக்டர் டிரெய்லருடன் பொருத்தப்பட்ட சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டு அமைப்பு” போன்றவை 30 இலட்சம் ரூபாய் செலவில் வேளாண்மைப் பொறியியல் துறையின் இயந்திரக் கலப்பைப் பணிமனைகளில் 2025-26ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டு, அவற்றின் பயன்பாடு குறித்து விவசாயிகளுக்குச் செயல் விளக்கங்கள் காண்பிக்கப்படும். இதன் வாயிலாக, சிறு, குறு விவசாயிகள் சிறிய இயந்திரங்களைப் பயன்படுத்தும் வாய்ப்பினைப் பெறுவார்கள்.
12. விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் உரிய நேரத்தில் கிடைக்க ஏதுவாக, சேலத்தில் உள்ள வேளாண்மைப் பொறியியல் துறை வளாகத்தில் புதிய வேளாண் இயந்திரங்கள் பழுது நீக்க மையம் 30 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படும்.
சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் வேளாண் பணிகளுக்கு இ-வாடகை செயலி வாயிலாக, குறைந்த வாடகைக்கு 344 வேளாண் இயந்திரங்கள், கருவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இவ்வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளில் ஏற்படும் பழுதுகளை உடனுக்குடன் நீக்கவும், உழவர்களுக்கு வேளாண் இயந்திரங்களை வாடகைக்கு விரைந்து வழங்கிடவும், 2025-26ஆம் ஆண்டில், சேலத்தில் உள்ள வேளாண்மைப் பொறியியல் துறை வளாகத்தில் வேளாண் இயந்திரங்கள் பழுது நீக்க மையம் புதியதாக அமைத்திட 30 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இதன் மூலம் சுமார் 10,000 விவசாயிகள் பயன்பெறுவர்.
13. சிறுதானியங்கள், நிலக்கடலை, பலா ஆகியவற்றின் விற்பனை, ஏற்றுமதியை அதிகரித்திட விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு ஏற்றுமதி தொடர்பான பயிற்சி மற்றும் வர்த்தக இணைப்புக் கூட்டம் நடத்தப்படும்.
விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், வர்த்தகர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கு சிறுதானியங்கள், நிலக்கடலை, பலா ஆகிய பயிர்களில் ஏற்றுமதி தொடர்பான பயிற்சியும், உற்பத்தியாளர்கள் – வர்த்தகர்கள் இணைப்பு கூட்டமும் 2025-26ஆம் ஆண்டில் ஒன்பது இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நடத்தப்படும். இதன் வாயிலாக வேளாண் விளைபொருள்களின் ஏற்றுமதியும் பிற விற்பனை வாய்ப்புகளும் அதிகரிக்கப்படும்.
14. விவசாயிகளுக்குத் தரமான சான்று பெற்ற விதைகள், உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் கிடைப்பதை உறுதி செய்ய ஒருங்கிணைந்த தரக்கட்டுப்பாடு பிரிவு ஏற்படுத்தப்படும். தமிழ்நாட்டில் 12,671 விதை விற்பனை நிலையங்களும், 15,940 உர விற்பனை நிலையங்களும், 8,290 பூச்சிக்கொல்லி மருந்துகள் விற்பனை நிலையங்களும் என மொத்தம் 36,901 விற்பனை உரிமங்கள் பெற்றுள்ள வேளாண் இடுபொருள் விற்பனை நிலையங்கள் உள்ளன. இவற்றின் வாயிலாக விற்கப்படும் விதைகள், உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் தரத்தினை ஆய்வு செய்து, விவசாயிகளுக்குத் தரமான வேளாண் இடுபொருட்கள் கிடைப்பதனை உறுதி செய்வதற்கென 2025-26ஆம் ஆண்டில் “ஒருங்கிணைந்த தரக்கட்டுப்பாடு பிரிவு” உருவாக்கப்படும்.
15. தரமான தென்னங்கன்றுகள் உற்பத்தி மற்றும் தென்னையில் உற்பத்தித்திறனை அதிகரித்தல் குறித்து 1,000 விவசாயிகளுக்குப் பயிற்சி வழங்கப்படும். தென்னை சாகுபடியில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது. தென்னையினை அதிக பரப்பளவில் முறையான பராமரிப்புடன் சாகுபடி செய்யும் விவசாயிகள், தென்னை நாற்றுப் பண்ணை நிறுவி தேவையின் அடிப்படையில் தரமான தென்னங்கன்றுகளை உற்பத்தி செய்து விற்பனை செய்வதன் வாயிலாகக் கூடுதல் வருமானம் பெற இயலும். எனவே, 2025-26ஆம் ஆண்டில், தென்னை பெருமளவில் பயிரிடப்படும் மாவட்டங்களில் இருந்து 1,000 தென்னை விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டு அரசு தென்னை நாற்றுப்பண்ணைகளில் ஒரு நாள் பயிற்சி வழங்கப்படும். இப்பயிற்சியில், பகுதிக்கு ஏற்ற இரகங்கள், தாய் மரங்கள், தரமான நெற்றுகள் ஆகியவற்றைத் தேர்வு செய்தல், நெற்றுகளைப் பதனிடும் வழிமுறைகள், நாற்றங்கால் அமைத்தல், நாற்று உற்பத்தியில் உர, நோய், பூச்சி மேலாண்மை மற்றும் தென்னையில் உற்பத்தித்திறனை அதிகரித்தல் குறித்த தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்கப்படும்.
16. மா மரங்களின் உற்பத்தித் திறனை அதிகரித்து, மா விவசாயிகள் பயன்பெறும் வகையில், மா மரங்களில் கவாத்து செய்வது குறித்த செயல்விளக்க விழிப்புணர்வுப் பயிற்சி 500 விவசாயிகளுக்கு அளிக்கப்படும்.
தமிழ்நாட்டில் 1.46 இலட்சம் எக்டரில் மா சாகுபடி செய்யப்படுகிறது. மா மரங்களில் அதிக மகசூல் பெற, அறுவடைக் காலம் முடிந்தவுடன் ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் கவாத்து செய்தல் அவசியம். கவாத்து மேற்கொள்வதன் மூலம் புதுத்தளிர்கள் உருவாகி காய்க்கும் கிளைகளின் எண்ணிக்கை அதிகமாவதால் மா உற்பத்தித்திறன் உயர்கிறது. மேலும், தரமான பழங்கள் கிடைப்பதுடன், பூச்சி மற்றும் நோய் தாக்குதல்களும் குறையும். எனவே, 2025-26ஆம் ஆண்டில், மா பயிரிடும் விவசாயிகள் முறையாகக் கவாத்து மேற்கொள்ள ஏதுவாக, கிராம அளவில் விவசாயிகளின் தோட்டங்களிலேயே 500 விவசாயிகளுக்கு நேரடி செயல்விளக்கப்பயிற்சி வழங்கப்படும்.
17. தோட்டக்கலைப்பயிர்கள், மலைப்பயிர்களில் சாகுபடி, மதிப்புக்கூட்டுதல் தொழில்நுட்பங்கள், சந்தை வாய்ப்புகள் குறித்த விபரங்கள் சமூக ஊடகங்கள் வாயிலாக விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இளைஞர்களைத் தோட்டக்கலையில் அதிக அளவில் ஈடுபடுத்தும் நோக்குடனும், தோட்டக்கலை சார்ந்த தொழில்களில் ஆர்வத்தைத் தூண்டவும், தோட்டக்கலைத் திட்ட செயல்பாடுகள், சாதனைகள், வெற்றிகரமான விவசாயிகளின் அனுபவக் கதைகள், தொழில்நுட்பங்கள் போன்ற தகவல்கள் வீடியோ காட்சிகள், புகைப்படங்கள் வாயிலாக சமூக ஊடகங்கள் [Facebook, Instagram, YouTube, WhatsApp மற்றும் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் வலைத்தளம் (Website)] மூலம் 2025-26ஆம் ஆண்டிலிருந்து பகிரப்படும். இதன் மூலம், இளைஞர்களிடையே குறைந்த பரப்பில் அதிக வருமானம், உயர் தொழில்நுட்ப சாகுபடி முறைகள், உயிர்ம வேளாண்மையின் முக்கியத்துவம், மண்வள மேம்பாடு குறித்து முழுமையான விழிப்புணர்வை ஏற்படுத்தி, அவர்களை தோட்டக்கலைப் பயிர் சாகுபடி மற்றும் மதிப்புக்கூட்டுதலில் ஈடுபட ஊக்குவிக்கப்படும். மேலும், திட்ட நிதி உதவிகள், பயிற்சிகள், தொழில் வாய்ப்புகள், சந்தை வாய்ப்புகள், சந்தை விலை விபரங்கள் ஆகியவையும் தொடர்ந்து பகிரப்படும்.
18. உழவர்கள், கிராமப்புர இளைஞர்கள் மற்றும் பெண்கள் என 1,000 நபர்கள் பயன்பெறும் வகையில் வேளாண்பொருட்கள் மதிப்புக் கூட்டும் இயந்திரம் இயக்கவும், பராமரிக்கவும் பயிற்சிகள் அளிக்கப்படும்.
வேளாண்பொருட்கள் மதிப்புக்கூட்டும் இயந்திரங்களைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்திட, 2025-26ஆம் ஆண்டில், ஒவ்வொரு மாவட்டத்திலும் வேளாண்மைப் பொறியியல் துறையும், வேளாண் அறிவியல் நிலையங்களும் இணைந்து விவசாயிகள், கிராமப்புர இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்ட 1,000 நபர்களுக்கு மதிப்புக் கூட்டும் இயந்திரங்களை இயக்கவும், பராமரிக்கவும் பயிற்சிகள் வழங்கப்படும்.
இதன் மூலம், விவசாயிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுவதோடு, வேளாண்பொருட்கள் மதிப்புக்கூட்டும் இயந்திரங்களின் பராமரிப்புச் செலவுகள் குறைந்து அவற்றின் வேலைத்திறனும், ஆயுட்காலமும் மேம்படுத்தப்பட்டு, விவசாயிகளின் நிகர வருமானம் அதிகரிக்க வழிவகைகள் ஏற்படுத்தப்படும்.
19. சென்னை மாநில வேளாண் இயந்திரங்கள் தகவல் மையத்தில் தொழில் முனைவோர் வாய்ப்புகளுக்கான வேளாண் பொறியியல் தொழில்நுட்பங்கள் குறித்து 500 படித்த இளைஞர்களுக்கு பயிற்சி வழங்கப்படும். சென்னையில் அமைந்துள்ள மாநில வேளாண் இயந்திரங்கள் தகவல் மையத்தில், வேளாண்மைப் பொறியியல் துறையினால், வேளாண்மைப் பொறியியல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி தொழில் முனைவோராக உருவாக்குவதற்கான ஐந்து நாள் பயிற்சி 500 படித்த இளைஞர்களுக்கு 2025-26ஆம் ஆண்டில் வழங்கப்படும்.
இந்தப் பயிற்சியானது மாணவர்கள், இளைஞர்கள், விவசாயிகள், வேளாண்மையில் ஆர்வமுடையவர்களுக்கு வேளாண் தொழில் முனைவு குறித்த தெளிவான புரிதலை வழங்கவும், அவர்களின் தொழில் முனைவுத் திறனை மேம்படுத்தவும், தற்போதைய சந்தைப் போக்குகளுக்கேற்ப சுயமாக வேளாண் தொழில் தொடங்கவும் வழிகாட்டுவதாக அமையும்.
20. வேளாண் இயந்திரங்களைப் பயன்படுத்தும் விவசாயிகள் பயன்பெறும் வகையில், வேளாண்மைப் பொறியியல் துறையால் வேளாண் இயந்திர உற்பத்தி நிறுவனங்களுடன் இணைந்து வேளாண் இயந்திரங்கள் பராமரிப்பு குறித்தான முகாம்கள் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்படும். டிராக்டர்கள், நெல் அறுவடை இயந்திரங்கள், கரும்பு அறுவடை இயந்திரங்கள், பவர் டில்லர்கள் போன்ற வேளாண் இயந்திரங்களும், விசை களையெடுக்கும் கருவி, ரோட்டவேட்டர், இதர உழவுக் கருவிகளும் விவசாயிகளால் பெருமளவு பயன்படுத்தப்படுகின்றன. இவ்வேளாண் இயந்திரங்கள், கருவிகளைப் பராமரிக்கும் முறைகளைப் பற்றி விவசாயிகளுக்கு விளக்கமளித்திட வேளாண் இயந்திர உற்பத்தி நிறுவனங்களோடு ஒருங்கிணைந்து வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் 2025-26 ஆம் ஆண்டில் மாவட்டத்திற்கு ஒன்று என்ற வீதத்தில் 37 மாவட்ட அளவிலான முகாம்கள் நடத்தப்படும்.
21. புதியதாகக் கண்டுபிடிக்கப்படும் நவீன வேளாண் பொறியியல் தொழில்நுட்பங்களை விவசாயிகளிடையே பிரபலப்படுத்திட 50 செயல் விளக்கங்கள் மேற்கொள்ளப்படும். இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், தனியார் வேளாண் இயந்திர உற்பத்தியாளர்கள், புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொள்ளும் விவசாயிகள் போன்றோர்களால் புதியதாக உருவாக்கப்படுகின்ற வேளாண் இயந்திரங்களையும், வேளாண் பொறியியல் தொழில்நுட்பங்களையும் இதர வேளாண் பெருமக்களிடையே பிரபலப்படுத்திடும் வகையில், வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் 2025-26ஆம் ஆண்டில், 50 செயல்விளக்கங்கள் மேற்கொள்ளப்படும். இதன் மூலம் 1,000 விவசாயிகள் நேரடியாகப் பயன்பெறுவர்.
22. 1,500 விவசாயிகள் பயன்பெறும் வகையில், நுண்ணீர்ப் பாசன அமைப்புகளின் பராமரிப்பு குறித்த செயல் விளக்கப் பயிற்சிகள் விவசாயிகளுக்கு வழங்கப்படும். நுண்ணீர்ப்பாசன அமைப்புகளைச் சரிவரப் பராமரிப்பதால் மட்டுமே அவற்றின் சீரான செயல்பாட்டினை உறுதி செய்து பாசனநீரின் பயன்பாட்டுத்திறனை அதிகரிக்க இயலும். எனவே, 2025-26ஆம் ஆண்டில், 1,500 விவசாயிகள் பயன்பெறும் வகையில், வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, நுண்ணீர்ப் பாசன நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து சொட்டு நீர், தெளிப்பு நீர்ப்பாசன அமைப்புகளைப் பராமரிப்பது குறித்த 50 செயல் விளக்கங்கள் அனைத்து மாவட்டங்களிலும் மேற்கொள்ளப்படும்.
1. பெஞ்சல் புயலில் சேதமடைந்த விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திற்கு உழவர் ஓய்வுக்கூடம் மற்றும் சுற்றுச் சுவர் ரூ.1.50 கோடி மதிப்பில் கட்டப்படும்.
2. விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு
ரூ.80 இலட்சம் செலவில் சுற்றுச் சுவர் கட்டப்படும்.
3. தமிழ்நாடு உணவு பதப்படுத்தும் தொழில்களுக்கான கொள்கை விரைவில் வெளியிடப்படும். இந்த கொள்கையானது உழவர் பெருமக்களுக்கும் கிராமப்புற இளைஞர்களுக்கும் உதவும் வகையிலும், சிறு மற்றும் குறு உணவு பதப்படுத்தும் தொழில்களை ஊக்குவிக்கவும், விவசாயப் பொருட்கள் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட உணவுப் பொருட்களின் ஏற்றுமதியை ஊக்குவிக்கவும், இக்கொள்கையில் வழிவகை செய்யப்படும்.
4. திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் சட்டமன்றத் தொகுதி, துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் நாயுடுமங்கலம் ஊராட்சியில் ரூ. 1 கோடி மதிப்பீட்டில் குளிர்பதன சேமிப்புக் கிடங்கு அமைக்கப்படும்.
The post செப்டம்பர் மாதம் முதல் நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2500 உயர்த்தி வழங்கப்படும்: அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவிப்பு appeared first on Dinakaran.