*100க்கும் மேற்பட்டோர் கைது
செய்துங்கநல்லூர் : செய்துங்கநல்லூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளை போலீசார் கைது செய்தனர்.
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்போர் நலச்சங்கம் சார்பில், நேற்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் நடந்தது.
இதன் ஒரு பகுதியாக செய்துங்கநல்லூர் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள், செய்துங்கநல்லூர் திருச்செந்தூர் மெயின் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் கண்ணன் தலைமை வகித்தார்.
உதவித்தொகைக்காக அரசாணை பெற்று கடந்த 1.5 ஆண்டுகளுக்கு மேலாக காத்திருக்கின்ற மாற்றுத்திறனாளிகளுக்கு உடனடியாக உதவித் தொகை வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும், மாற்றுத்திறனாளிகளுக்கு தற்போது வழங்கப்படும் ரூ.1,500 உதவித்தொகையை உயர்த்தி ரூ.6 ஆயிரம் வழங்க வேண்டும், 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
மாற்றுத்திறனாளிகள் போராட்டம் காரணமாக திருச்செந்தூர் -நெல்லை சாலையில் சுமார் 15 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனடியாக பாதுகாப்பு பணியில் இருந்து செய்துங்கநல்லூர் இன்ஸ்பெக்டர் இன்னோஸ்குமார் தலைமையிலான போலீசார், மறியலில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளை கைது செய்தனர். பின்னர் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்ட அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
இதேபோல் தூத்துக்குடி தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பொருளாளர் கிருஷ்ணகுமார் தலைமை வகித்தார். இதில் மாற்றுத்திறனாளிகள் பலர் பங்கேற்றனர்.
The post செய்துங்கநல்லூரில் மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல் appeared first on Dinakaran.