ரெயில் மூலம் கஞ்சா கடத்துவதை தடுப்பதற்காக ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் தனிப்படை அமைத்து சோதனை நடத்தி வருகின்றனர்.
நேற்று ரெயில்வே போலீசார் கண்ணன், சக்திவேல், கவியரசு, அருண்குமார், சென்னகேசவன் ஆகியோர் கொண்ட தனிப்படை குழுவினர் ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் ரெயில் நிலையத்திலிருந்து கேரள மாநிலம் ஆலப்புழா செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் சோதனை நடத்தினர். இந்த சோதனை ஜோலார்பேட்டை ரெயில் நிலையம் முதல் சாமல்பட்டி வரை நடத்தப்பட்டது.
அப்போது முன்பதிவு பெட்டியில் அனாதையாக ஒரு பை கிடந்தது. அதை கைபற்றி திறந்து பார்த்தனர். அந்த பையில் 4 பண்டல்களில் 8 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கு உள்ள சக பயணிகளிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் இதனை யார் கொண்டு வந்தது என்பது தெரியவில்லை, இதனையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட 8 கிலோ கஞ்சாவை சேலம் ரெயில்வே போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.