சென்னை: சொத்து மதிப்பு நிர்ணய கள ஆய்வின் போது நிலம், அரசு புறம்போக்கு நிலமா அல்லது அதில் நீதிமன்ற வழக்குகள் உள்ளதா என்பதை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் என பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்ட சுற்றறிக்கை: இந்திய முத்திரைச் சட்டப்பிரிவு 47ஏ(5)ன் கீழ் பெறப்படும் மேல்முறையீடு மனுக்கள் மற்றும் 47ஏ(6)ன் கீழ் மேற்கொள்ளப்படும் தன்னியலான சீராய்வு நடவடிக்கை தொடர்பாகவும் பெறப்படும் மேல்முறையீடு மனுக்களின் மீது விசாரணை அலுவலர்கள் எடுக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து பார்வையில் காணும் சுற்றறிக்கைகள் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன் தொடர்சியாக, இந்திய முத்திரைச் சட்டப்பிரிவு 47ஏ(ஜி) மற்றும் 47ஏ6ன் கீழ் சொத்தின் சந்தை மதிப்பை நிர்ணயிக்கும் பொருட்டு பதிவுத்துறைத் தலைவர்/முதன்மை வருவாய்க் கட்டுப்பாட்டு அலுவலர் சார்பாக கோரப்படும் விசாரணை அலுவலரின் கள ஆய்வு அறிக்கையில் மதிப்பு நிர்ணயம் செய்யப்படும் சொத்து அரசு புறம்போக்கு நிலங்கள் அல்ல என்பதை வருவாய்துறையின் ‘‘தமிழ்நிலம்” என்ற இணையதளத்தில் உறுதிசெய்து அதனடிப்படையில் கள ஆய்வு அறிக்கையை பதிவுத்துறை தலைவர்/முதன்மை வருவாய்க் கட்டுப்பாட்டு அலுவலருக்கு அனுப்பிட அறிவுறுத்தப்படுகிறது.
மதிப்பு நிர்ணயம் செய்யப்படும் சொத்தின் பிரஸ்தாப புல எண் மற்றும் சுற்றுப்புல எண்களின் ஆவணப் பதிவிற்கு முந்தைய 5 வருட விற்பனைப் புள்ளி விவரங்கள் மற்றும் ஆவணப்பதிவிற்கு பிந்தைய 2 வருட விற்பனைப்புள்ளி விவரங்களை வில்லங்கச்சான்றின் அடிப்படையில் பரிசீலனை செய்து அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு பரிசீலிக்கும் நிகழ்வில் பிரஸ்தாப புல எண்ணில் நீதிமன்ற வழக்குகளோ மற்றும் நிலமோசடி நிகழ்வுகளோ கண்டறியப்படின் அந்நிகழ்வு குறித்த விவரங்கள் மதிப்பு நிர்ணய கள ஆய்வு அறிக்கையில் தவறாது குறிப்பிடப்பட வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
The post சொத்து மதிப்பு நிர்ணய கள ஆய்வின்போது அரசு புறம்போக்கு நிலமா என உறுதி செய்ய வேண்டும்: அலுவலர்களுக்கு பதிவுத்துறை உத்தரவு appeared first on Dinakaran.