ஒரு காலத்தில் சோழ சாம்ராஜ்யத்தின் தலைநகராக விளங்கிய நகரம் கும்பகோணம். மாவட்ட தலைநகருக்கான அனைத்துத் தகுதிகளும் இருப்பதால் கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என இங்குள்ள அரசியல் கட்சிகளும், பொதுநல அமைப்புகளும் 26 ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது செம்பனார்கோவில் மற்றும் ஒரத்தநாட்டில் பிரச்சாரம் செய்த திமுக தலைவர் ஸ்டாலின், “திமுக ஆட்சிக்கு வந்ததும் 100 நாட்களில் கும்பகோணம் தனி மாவட்டமாக அறிவிக்கப்படும்” என கும்பகோணத்து வாக்காளர்களுக்கு நம்பிக்கையளித்தார். இதோ, அடுத்த தேர்தலும் வரப்போகிறது. இன்னும் அந்த வாக்குறுதியை நிறைவேற்றித் தரவில்லையே ஸ்டாலின் என கும்பகோணத்து மக்கள் குறைபட்டுக் கொள்கிறார்கள்.