வாடிப்பட்டி: தைப் பொங்கலையொட்டி அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் பகுதிகளில் நடக்கும் ஜல்லிக்கட்டுகளில் அதிரடி காட்டுவதற்காக காளைகள் தயாராகி வருகின்றன. இதற்காக அவைகளுக்கு தினசரி காலை, மதியம், மாலை, இரவு என 4 நேரங்களுக்கு போஷாக்கான உணவு கொடுத்து, பெற்ற குழந்தையைப் போல உரிமையாளர்கள் பராமரித்து வருகின்றனர். தமிழர் திருநாளாம் தைப்பொங்கலையொட்டி தென்மாவட்டங்களில் குக்கிராமங்கள் முதல் பெருநகரங்கள் வரை ஜல்லிக்கட்டு வீரவிளையாட்டு களைகட்டும். ஜனவரி முதல் ஜூன் வரை 6 மாதங்கள் இந்த வீரவிளையாட்டு தொடரும். மதுரை மாவட்டத்தில் தை 1ம் தேதி அவனியாபுரம், 2ம் தேதி பாலமேடு மற்றும் 3ம் தேதி உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறும். இதைக் காண தமிழகம் மட்டுமல்லாமல் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளை சேர்ந்தவர்களும் வருவர்.
ஜல்லிக்கட்டில் காளைகள் வெற்றி பெற்று பரிசு வாங்கி விட்டால், அந்த காளைகளுக்கான மவுசே தனி. இந்த கௌரவத்திற்காக உரிமையாளர்கள் தங்களது காளைகளை முழுவீச்சில் தயார்படுத்தி வருகின்றனர். வரும் 2025ம் ஆண்டில் ஜன.14ல் அவனியாபுரம், 15ல் பாலமேடு, 16ல் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. இதற்காக வாடிப்பட்டி பகுதியில் காளைகளுக்கு தீவிரப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. களத்தில் மூச்சுத்திணறல் ஏற்படாமல் ஓடுவதற்காக காளைகளுக்கு நடைப்பயிற்சி, நீச்சல் பயிற்சி, மாட்டு கொம்புகளின் கூச்சம் குறையும் வகையில், மண்குத்து பயிற்சி உள்ளிட்ட பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. காளைகளுக்கு ஊட்டச்சத்து கிடைக்கும் வகையில் பச்சரிசி, மண்டை வெல்லம், தேங்காய், பொட்டு பருத்தி, சுண்டல் உள்ளிட்ட போஷாக்கு நிறைந்த உணவுகளை வழங்கி தயார்படுத்தி வருகின்றனர்.
ஜல்லிக்கட்டு போட்டிகளில் தங்களது காளைகள் பரிசுகளை வென்று பெருமையை தேடி தரும் என நம்பிக்கையுடன் உரிமையாளர்கள் கூறுகின்றனர். இது குறித்து காளை உரிமையாளர் வினோத் கூறுகையில், ‘தை மாதம் முதல் மதுரை உள்ளிட்ட தென்மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டுக்கு காளைகளை பிரத்யேகமாக தயார்படுத்தி வருகிறோம். தினசரி காலை, மதியம், மாலை, இரவு என நான்கு வேளைகளும் போஷாக்கான உணவு வழங்கி வருகிறோம். குறிப்பாக இரவு நேரத்தில் காளைகளுக்கு இரும்புச்சத்து கிடைக்கும் வகையில் பேரிச்சம்பழங்களை வழங்குகிறோம். மாதிரி வாடிவாசல் அமைத்து அதில் காளைகளை பழக்கி வருகிறோம். மேலும் நீச்சல், நடை, மண் குத்து பயிற்சி உள்ளிட்ட பயிற்சி அளித்து வருகிறோம். எனது காளை நிச்சயம் பரிசை வெல்லும்’ என்றார்.
The post ஜல்லிக்கட்டில் அதிரடி காட்ட காளைகள் ரெடி: நீச்சல், மண் குத்துப் பயிற்சியுடன் தயாராகி வருகிறது appeared first on Dinakaran.