பெங்களூரு: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணையின்போது அவரது வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட தங்க, வைர நகைகள், வெள்ளிப் பொருட்கள் கர்நாடக அரசின் கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளன. இந்த நகைகளை கர்நாடக மாநிலம், தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என கடந்த ஆண்டு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, மகன் ஜெ.தீபக் ஆகியோர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கின் விசாரணையின்போது ஜெ.தீபா தரப்பில், தான் ஜெயலலிதாவின் சட்டப்பூர்வமான வாரிசு என வாதிடப்பட்டது. இதற்கு கர்நாடக அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.