சென்னை: கடலூர் மாவட்டத்தில் லட்சக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்து, சுற்றுச்சூழலை சீரழிக்கும் என்எல்சி நிலக்கரி சுரங்கத்திற்கு எதிராக முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பை வெளிப்படுத்தாதது கடலூர் மக்களுக்கு அவர் இழைக்கும் துரோகத்தையும், இரட்டை வேடத்தையும் அம்பலப்படுத்தியுள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த அரிட்டாப்பட்டி பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க அனுமதிக்க மாட்டேன்; அவ்வாறு அமைக்கும் நிலை வந்தால் பதவியிலிருந்து விலகிவிடுவேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேரவையில் அறிவித்திருக்கிறார். டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக போராடும் மக்களின் உணர்வுகளை மதித்து இத்தகைய நிலைப்பாட்டை முதல்வர் எடுத்தது சரியானது தான்.