டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான ஒப்பந்த புள்ளி கோரும் போதே தீர்மானத்தை நிறைவேற்றி ஒன்றிய அரசுக்கு அனுப்பி இருந்தால் எளிதாக தடுத்திருக்கலாம் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார். தமிழக சட்டப் பேரவைக்கு வெளியில் அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது:
மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் நாயக்கன்பட்டியில் சுரங்கம் அமைப்பதை ஒன்றிய அரசு ரத்து செய்ய வேண்டும் என்ற தீர்மானத்தை தமிழக அரசு சட்டமன்றத்தில் கொண்டு வந்திருக்கிறது. 2023ம் ஆண்டு மாநில உரிமைகளை பறிக்கும் விதமாக டங்ஸ்டன் போன்ற 20 அரிய வகை கனிம வளங்கள், நாட்டில் வெட்டி எடுப்பதற்கு அனுமதி வழங்கும் வகையில் கனிம சட்ட திருத்தத்தை கொண்டு வந்து நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு நிறைவேற்றியது.
அந்த சமயத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முழுமையாக எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. 2023ல் மாநில அரசின் உரிமை பறிபோகிற போது தகுந்த அழுத்தத்தை கொடுத்து இந்த சட்டம் நிறைவேற்ற விடாமல் தடுத்திருக்க வேண்டும். ஆரம்ப கட்டத்திலேயே முதல்வர் கடிதம் எழுதி இருந்தால் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்கப்படும் ஏலத்தை நிறுத்தி இருக்கலாம்.
தற்போது கொண்டு வந்த தீர்மானத்தை, சுரங்கம் அமைப்பதற்கான ஒப்பந்த புள்ளி கோருகிற போது நிறைவேற்றி ஒன்றிய அரசுக்கு அனுப்பி இருந்தால் எளிதில் முடித்திருக்கலாம். தமிழக மக்கள் பாதிக்கக்கூடிய எந்த ஒரு திட்டம் வந்தாலும் அதை அதிமுக அனுமதிக்காது. அது எங்கள் நிலைப்பாடு. எனவே இந்த டங்ஸ்டன் சுரங்கம் அமைத்தால் அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என்பதால் இந்த அரசு கொண்டு வந்த தீர்மானத்தை அதிமுக ஆதரித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
The post டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க ஒப்பந்த புள்ளி கோரும் போதே தீர்மானத்தை நிறைவேற்றி ஒன்றிய அரசுக்கு அனுப்பியிருந்தால் எளிதாக தடுத்திருக்கலாம்: எடப்பாடி பழனிசாமி பேட்டி appeared first on Dinakaran.