பழநி: “டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. 5000 பக்கம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் முதல்வரின் பெயரும்கூட இருப்பதாகத் தகவல் உள்ளது. யாருக்குத் தெரியும், தமிழகத்தின் கேஜ்ரிவால் வெளிவரலாம்.” என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்தார்.
திண்டுக்கல் மாவட்டம் பழநியில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது: ''அமித் ஷாவாக இருந்தாலும் சரி எந்த ஷா வாக இருந்தாலும் சரி என்று முதல்வர் பேசியுள்ளார். நம் தமிழ்நாட்டின் முதல்வர் பொய் பேசும் முதல்வராக உள்ளார். நீட்டை கொண்டு வந்தது திமுக. 2010-ல் நீட் மசோதாவை மக்களவையில் முன்மொழிந்தது திமுகவைச் சேர்ந்த எம்.பி. காந்திச்செல்வன். ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் தான் நீட் அமல்படுத்தப்பட்டது. நீட் தேர்வு முதன்முறையாக அந்த ஆட்சியில் தான் 2013-ல் நடந்தது.