சென்னை: டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் சோதனை மேற்கொண்ட போது அதிகாரிகள் துன்புறுத்தப்பட்டதாக கூறப்படும் தகவல்கள் தவறானவை என்று அமலாக்கத்துறை தரப்பில் வாதிடப்பட்டது. டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை நடத்தப்பட்ட சோதனையை சட்டவிரோதமானது என்று அறிவிக்கக்கோரி டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் மற்றும் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த வழக்குகள் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், கே.ராஜசேகர் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜூ தனது வாதத்தை தொடர்ந்தார். சோதனையின் போது பெண் அதிகாரிகள் யாரும் இரவில் தங்க வைக்கப்படவில்லை. ஒரு சில ஆண் அதிகாரிகள் மட்டுமே மூன்று நாளும் தலைமை அலுவலகத்தில் தங்க வைக்கப்பட்டனர். சோதனையின் போது டாஸ்மாக் அதிகாரிகளுக்கோ அல்லது அலுவலக உடைமைகளுக்கோ எந்த சேதமும் ஏற்படுத்தவில்லை. இதனை எல்லாம் ஒப்புக்கொண்டு அதிகாரிகள் பஞ்சநாமாவில் கையெழுத்திட்டுள்ளனர். சோதனையின் போது அமலாக்கத்துறை சார்பில் பெண் அதிகாரிகள் இருந்ததாகவும் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் சோதனை மேற்கொண்ட போது அதிகாரிகள் துன்புறுத்தப்பட்டதாகவும் பொய்யான தகவல்கள் கூறப்பட்டுள்ளது.
எதற்காக வந்திருக்கிறோம் என்ற தகவலை டாஸ்மாக் நிறுவன தலைவர் மற்றும் மேலாளரிடம் தெரிவித்த பின்னரே சோதனை தொடங்கப்பட்டது. அனைவருக்கும் உணவு அளிக்கப்பட்டதோடு போதிய ஓய்வும் அளிக்கப்பட்டது. நள்ளிரவில் பெண் ஊழியர்கள் அனுப்பப்படவில்லை. அவர்களின் பாதுகாப்பு கருதி முன்கூட்டியே அனுப்பப்பட்டனர். சோதனையின் போது யாருடைய அந்தரங்க உரிமையும் பாதிக்கப்படவில்லை என்றார். அமலாக்கத்துறை வாதம் நிறைவடைந்த நிலையில் டாஸ்மாக் தரப்பு பதில் வாதத்துக்காக வழக்கு வரும் 21ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
The post டாஸ்மாக் தலைமை அலுவலக சோதனையின்போது அதிகாரிகள் துன்புறுத்தப்படவில்லை: உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை வாதம் appeared first on Dinakaran.