சென்னை: டாஸ்மாக் தொடர்பான அதிகாரிகள், கான்ட்ராக்டர், டாஸ்மாக் தொடர்பாக சோதனை செய்யும் அதிகாரிகளின் நண்பர்களின் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடந்தது. தமிழக அரசின் டாஸ்மாக் (தமிழ்நாடு மாநில வாணிப கழகம்) நிறுவனத்துக்கு தனியார் நிறுவனங்களிடம் இருந்து மதுபானங்கள் கொள்முதல் செய்யப்படுவதில் பல்வேறு முறை கேடுகள் நடப்பதாகவும், இதில் வரி ஏய்ப்பு, சட்டவிரோத பண பரிவர்த்தனை நடந்துள்ளதாகவும் அமலாக்கத்துறைக்கு புகார்கள் சென்றன. புகாரின் பேரில், கடந்த மாதம் மார்ச் 6ம் தேதியிலிருந்து 3 நாள் சென்னையில் உள்ள டாஸ்மாக் அலுவலகம் உள்ளிட்ட 7 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் பல்வேறு ஆவணங்கள் மற்றும் பணம் கைப்பற்றப்பட்டதாகவும், பார் உரிமங்கள் வழங்குதல், அதற்கான ஒப்பந்தங்கள் வழங்குதல், டெண்டர் விடுதலில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும், மதுபான பாட்டிலுக்கு ரூ.10 முதல் ரூ.30 வரை அதிகமாக விற்கப்படுவதாகவும், டாஸ்மாக் நிறுவனத்தில் உயர் அதிகாரிகள், மதுபான நிறுவனங்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்திருந்தது. மேலும், டாஸ்மாக் மூலம் அரசு கணக்கில் சேராமல் ரூ.1000 கோடிக்கு முறைகேடு நடந்துள்ளதாக அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டது. இதுகுறித்து அப்போது அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி விளக்கம் அளித்தார்.
அதில், எந்தவித முகாந்திரமும் இல்லாமல் டாஸ்மாக் நிறுவனம் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. அமலாக்கத்துறையால் நடத்தப்பட்ட ரெய்டு எந்த ஆண்டு பதியப்பட்ட, எந்த முதல் தகவல் அறிக்கை அடிப்படையில் நடத்தப்பட்டுள்ளது என கூறவில்லை. கடந்த 4 ஆண்டுகளில் பார் டெண்டர் முழுவதும் ஆன்லைன் டெண்டராக மாற்றப்பட்டிருக்கிறது. அவர்கள் பொதுவாக சொல்லியிருக்கும் 1000 கோடி முறைகேடு என்பது எந்த முகாந்திரமும் இல்லாமல் பொத்தாம்பொதுவாக சொல்லப்பட்டுள்ளது என அமலாக்கத்துறைக்கு எதிராக அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
இதை தொடர்ந்து, கடந்த மாதம் சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை மீண்டும் சோதனை நடத்தியது. அதிலும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது.
இந்நிலையில், நேற்று காலை முதல் மணப்பாக்கத்தில் உள்ள டாஸ்மாக் மேலாண் இயக்குநர் விசாகன் இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. சூளைமேடு பகுதியில் இருக்கும் எஸ்.என்.ஜே நிறுவனம், திருவல்லிக்கேணியில் தொழிலதிபர் ஒருவர் வீட்டிலும், தேனாம்பேட்டை, தி.நகர் உள்ளிட்ட பல இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அதுமட்டுமல்லாமல் சென்னையில் தேனாம்பேட்டை, தி.நகர், அண்ணா சாலை, பெசன்ட் நகர், சேத்துப்பட்டு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடந்தது.
குறிப்பாக டாஸ்மாக் தொடர்பான அதிகாரிகள், கான்ட்ராக்டர், டாஸ்மாக் தொடர்பாக சோதனை செய்யும் அதிகாரிகளின் நண்பர்களின் வீடுகள் உள்ளிட்ட பல இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின்போது, டாஸ்மாக் எம்டி விசாகன் வீட்டின் அருகே கிழிந்த நிலையில் கிடந்த வாட்ஸ்அப் ஸ்கிரீன் ஷாட் நகல்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் கண்டெடுத்துள்ளனர். அதேபோல், டாஸ்மாக் மேலாண் இயக்குநர் விசாகனின் மகனிடமும் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர். சுமார் 8 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நடந்த நிலையில், விசாகன் மற்றும் அவரது மனைவியை அமலாக்கத்துறையினர் காரில் அழைத்துச் சென்றனர். அவரிடம் மதியம் 2 மணிக்கு தொடங்கிய விசாரணை இரவு 8 மணி வரை நடந்தது. வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
* சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டிலும் சோதனை
ஆகாஷ் பாஸ்கரன் தமிழ் சினிமாவில் தற்போது முக்கிய தயாரிப்பாளராக இருந்து வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன் வெளியான நடிகர் தனுஷின் ‘நானும் ரவுடிதான்’ திரைப்படத்தில் விக்னேஷ் சிவனின் உதவி இயக்குநராக பணியாற்றினார். தற்போது இவர் ‘டான் பிக்சர்ஸ்’ தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி தனுஷின் இட்லி கடை, சிவகார்த்திகேயனின் பராசக்தி ஆகிய படங்களை தயாரித்து வருகிறார். மேலும் அதர்வா – காயாடு லோஹர் நடிக்கும் இதயம் முரளி, சிம்புவின் 49வது படத்தையும் தயாரித்து வருகிறார். உதவி இயக்குனராக சினிமாவில் நுழைந்த ஆகாஷ் பாஸ்கரன் எப்படி திடீர் என்று இவ்வளவு படங்களை தயாரிக்கிறார் என்று சினிமா வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டு வந்தது.
சமீபத்தில் நடந்த ஆகாஷ் பாஸ்கரன் திருமணத்தில், நடிகர்கள் தனுஷ், நயன்தாரா, அனிருத், சிவகார்த்திகேயன், அட்லி, தமிழரசன் பச்சமுத்து, விக்னேஷ் சிவன், ஆர்.ரவிக்குமார் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர். இந்நிலையில், நேற்று காலை 6.15 மணி முதல் மதியம் 3 மணி வரை, இவர் வசிக்கும் தேனாம்பேட்டை, கே.பி.தாசன் சாலையில் உள்ள அபார்ட்மென்டில் PY-01, DC-1951 என்ற பதிவு எண் கொண்ட வாகனத்தில் வந்த 5 அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். இந்த சோதனை எதற்காக நடத்தப்பட்டது. எந்தெந்த ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது என்ற தகவல் வெளியாகவில்லை. சோதனைக்கு பின்னர், கார் ஓட்டுநரை அமலாக்கத்துறையினர் விசாரணைக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.
The post டாஸ்மாக் தொடர்பான அதிகாரிகள், நண்பர்கள், கான்ட்ராக்டர் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை appeared first on Dinakaran.