திருச்செங்கோடு: கரூர் மாவட்டம், பசுபதிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி (19). கரூர் வெங்கமேடு பகுதியைச் சேர்ந்தவர் திருப்பதி (19). இவர்கள் இருவரும், நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு-ஈரோடு ரோட்டில் செயல்பட்டு வரும் தனியார் கலை அறிவியல் கல்லூரியில், பிசிஏ 2ம் ஆண்டு படித்து வந்தனர். செமஸ்டர் தேர்வு எழுதி விட்டு, சொந்த ஊரான கரூருக்கு, நேற்று மாலை டூவீலரில் சென்றனர். டூவீலரை திருப்பதி ஓட்டிச்சென்றார்.
சித்தாளந்தூர் அருகே காட்டுபாளையம் பிரிவு ரோடு பக்கம் சென்ற போது, எதிரில் வந்த சரக்கு வாகனம், எதிர்பாராத விதமாக டூவீலர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயமடைந்த இருவரும், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மாணவர்கள் சென்ற டூவீலர் சுக்கு நூறாக நொறுங்கியது. டூவீலர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற சரக்கு வாகனத்தை, அங்கிருந்தவர்கள் விரட்டி சென்று தடுத்து நிறுத்தினர். பின்னர், அந்த வாகனத்தை ஓட்டி வந்த தேவனாங்குறிச்சி பகுதியை சேர்ந்த டிரைவர் ரமேஷை (30) பிடித்து திருச்செங்கோடு புறநகர் போலீசில் ஒப்படைத்தனர்.
The post டூ வீலர் மீது வேன் மோதல் 2 மாணவர்கள் பலி: தேர்வு எழுதி விட்டு சென்ற போது பரிதாபம் appeared first on Dinakaran.