புதுடெல்லி: டெல்லியில் காற்று மாசு குறைவதற்காக GRAP-4-இன் கீழ் எடுக்கப்பட்டுள்ள கடுமையான நடவடிக்கைகளை முன் அனுமதியின்றி குறைக்கக் கூடாது என்று மாநில அரசிடம் உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இது குறித்த வழக்கு நீதிபதிகள் அபய் ஓகா, அகஸ்டின் ஜார்ஜ் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது டெல்லி அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், "இன்று (திங்கள்கிழமை) முதல் GRAPஇன் 4-ம் கட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. கனரக வாகனங்கள் தேசிய தலைநகருக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது" என தெரிவித்தார். அப்போது, "காற்றின் தரக் குறியீடு (AQI) 300 மற்றும் 400-க்கு இடையில் உள்ளபோது நிலை 4 செயல்படுத்தப்பட வேண்டும். GRAP-இன் நிலை 4-ஐ பயன்படுத்துவதைத் தாமதப்படுத்துவதன் மூலம் இந்த விஷயங்களில் நீங்கள் எப்படி ரிஸ்க் எடுக்க முடியும்?” என்று நீதிபதிகள் வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினர்.