புதுடெல்லி: “அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் கட்டணத் திட்டங்கள் சர்வதேச பொருளாதார ஸ்திரத்தன்மையை பாதிக்கும், செலவுகளை அதிகரிக்கும், அந்நிய முதலீட்டுகள் வருவதை மட்டுப்படுத்தும்” என ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்டு ட்ரம்ப் அண்மையில் பதவியேற்றுக் கொண்டார். தொடர்ந்து அவர், டாலருக்கு பதில் புதிய கரன்சியை கொண்டுவர முயற்சித்தால் இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகள் மீது 100% வரி விதிக்கப்படும். எனவே, புதிய கரன்சியை உருவாக்க மாட்டோம் என்றும் டாலருக்கு பதிலாக வேறு கரன்சிக்கு ஆதரவு அளிக்க மாட்டோம் என்றும் பிரிக்ஸ் நாடுகள் உத்தரவாதம் அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் கூடுதல் வரி விதிக்கப்படும் என எச்சரித்தார்.