பாரீஸ்: வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் – உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சந்திப்பு காரசார விவாதத்துடன் முடிந்து, பேச்சுவார்த்தையில் இருந்து ஜெலன்ஸ்கி வெளியேற்றப்பட்ட நிலையில் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் உக்ரைன் அதிபருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இது ரஷ்யா – உக்ரைன் போர் நிறுத்த முயற்சிகள் குறித்த சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
வெள்ளிக்கிழமை வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை உக்ரைன் அதிபர் வொலொடிமிர் ஜெலன்ஸ்கி சந்தித்தார். ஜெலன்ஸ்கியுடனான சந்திப்பில் ட்ரம்ப் பொறுமையிழந்தவராக காரசார விவாதத்தில் ஈடுபட்டார். முதலில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நன்றி காட்டாததற்காக அவரை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வெளிப்படையாக கண்டித்தார். பின்பு, ஜெலன்ஸ்கி சமாதானத்துக்கு தயாராக இல்லை என்றும், ஓவல் அலுவலகத்துக்கே வந்து அமெரிக்காவை அவமதித்துவிட்டதாக குற்றம்சாட்டினார்.