கோவை: கார்த்திகை தீபத் திருநாள் நாளை (டிச.13) கொண்டாடப்படுவதையொட்டி, அகல் விளக்கு விற்பனை தீவிரமடைந்துள்ளது. மண்ணால் செய்யப்பட்ட அகல் விளக்குகளுடன் தற்போது, தொழில்நுட்பத்தின் பங்களிப்புடன் தயாரிக்கப்பட்ட அகல் விளக்குகளும் விற்பனைக்கு வந்துள்ளன. அதில் ஒன்றுதான் சென்சார் தொழில் நுட்பத்தில் தண்ணீரில் எரியும் அகல் விளக்கு. இத்தகைய அகல் விளக்குகள், கோவை நகரின் பேன்சி கடைகளில் விற்பனை செய்யப்படுகின்றன.
இதுகுறித்து கோவை விற்பனையாளர்கள் கூறியது: “மண்ணால் செய்யப்பட்ட அகல் விளக்குகளுக்கு எண்ணெய் ஊற்றி, திரி வைத்து பற்ற வைக்க வேண்டும். சென்சார் தொழில் நுட்பத்தில் எரியும் விளக்குகளுக்கு எண்ணெய் தேவையில்லை. தண்ணீரே போதும். பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட இந்த விளக்கில் திரி கிடையாது. திரியை பற்ற வைக்கும் இடத்தில் சிறிய பல்பு பொருத்தப்பட்டிருக்கும். பிளாஸ்டிக் விளக்கின் அடிப்பகுதி, மேலே உள்ள மூடிக்கு இடையே வயர்கள் சிறு கருவியுடன் பொருத்தப்பட்டிருக்கும். எண்ணெய் ஊற்றும் இடத்தில் தண்ணீர் ஊற்றினால், சென்சார் மூலம் சிறிய விளக்கு எரியத் தொடங்கிவிடும்.