வாஷிங்டன்: இந்தியாவில் உள்ள இளம் தம்பதியினரின் 78 விழுக்காட்டினர் படுக்கையில் தனியாக உறங்குவதை விரும்புவதாக ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது. அதிக வேலைப்பளு மற்றும் குறட்டை சத்தம் போன்ற பல்வேறு காரணங்களையும் அவர் தெரிவித்து இருக்கின்றனர். இந்திய குடும்பங்களில் கணவன் – மனைவி இடையிலான பந்தத்திற்கு முக்கிய இடம் உண்டு. அந்த பந்தத்திற்கு இப்போது முக்கிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது உறக்கம். குறிப்பாக கொரோனா காலத்துக்கு பிறகு தனித்தனியாக உறங்கும் இளம் தம்பதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஆய்வு முடிவு ஒன்று வெளியாகியுள்ளது.
தனித்தனியாக உறங்கும் இளம் தம்பதிகள் தென்கொரியாவில் – 65%மும், சீனாவில் – 67%ஆகவும் உள்ள நிலையில், இந்தியாவில் – 78% இளம் தம்பதிகள் தனித்தனியாக உறங்குவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் – 50% இளம் தம்பதிகள் தனித்தனியாகவும், ஒன்றாக சேர்ந்தும் உறங்குகின்றனர். தம்பதிகள் தனியாக உறங்குவது அதிர்ச்சிக்குரியதாக இருந்தாலும், ஆழ்ந்த உறக்கத்திற்கு அது உதவுவதாக சிலர் தெரிவிக்கின்றனர்.
அதிக வேலைப்பளு, குறட்டை, உறவு பிரச்சனைகள், மனச்சோர்வு மற்றும் தம்பதிகள் இடையே நெருக்கமின்மை ஆகியவை தனித்தனியாக உறங்குவதற்கான முக்கிய காரணங்களாக கூறப்படுகின்றன. ஆனால் இந்த வாதங்களை நிராகரிக்கும் மருத்துவர்கள், தம்பதிகள் சேர்ந்து உறங்குவதே சிறந்தது என்றும் மனச்சோர்வு, பதற்றம், மன அழுத்தம் ஆகியவற்றை குறைக்க வழிவகுக்கும் என்றும் கூறுகின்றனர். சேர்ந்து உறங்கும் தம்பதிகள் அதிகளவிலான நன்மைகள் பெறுவதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. தம்பதிகள் தனித்தனியாக உறங்கும் நிலை நீடித்தால் உறவில் விரிசல் ஏற்படுவது மட்டுமின்றி பணி செய்யும் இடங்களில் நிலை தடுமாற வைக்கும் என்றும், மனநிலை சிக்கலை ஏற்படுத்தும் என்றும் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
The post தனித்தனியாக உறங்குவதால் உறவுச் சிக்கல்..ஆய்வில் அதிர்ச்சி: தம்பதிகளுக்கு மருத்துவர்கள் கூறும் அறிவுரை!! appeared first on Dinakaran.