பாகிஸ்தானின் மிகப்பெரிய மாகாணமாக பலுசிஸ்தான் உள்ளது. ஆனால், பாகிஸ்தான் அரசு தங்களை புறக்கணிப்பதாகவும், பலூச் பகுதியை தனி நாடாக அறிவிக்க கோரியும் அங்குள்ள பலூச் விடுதலைப் படையினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தியா – பாகிஸ்தான் இடையே மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், பலூச் மக்களும் தங்கள் பங்குக்கு பாகிஸ்தானுக்கு எதிராக அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். சமீபத்தில் 12 பாகிஸ்தான் ராணுவத்தினர் சென்ற வாகனத்தை வெடி வைத்து தகர்த்தனர். பலூச் மாகாண தலைநகர் குவெட்டாவை கைப்பற்றி விட்டதாகவும் பலூச் விடுதலைப் படை அமைப்பினர் அறிவித்துவிட்டனர்.
அங்குள்ள பிரபல எழுத்தாளர் மிர் யார் பலூச் நேற்றுமுன்தினம் கூறும்போது, ‘‘பாகிஸ்தானில் இருந்து பலுசிஸ்தான் தனி நாடாகி விட்டது. இதற்கான அறிவிப்பு விரைவில் வரும். புதிய அரசிடம் நிர்வாகம் ஒப்படைக்கப்படும். எனவே, டெல்லியில் பலுசிஸ்தான் தூதரகத்தை தொடங்க அனுமதிக்க வேண்டும். ஐ.நா. பலுசிஸ்தானுக்கு அமைதி படையை அனுப்ப வேண்டும். தனி நாடாக பலுசிஸ்தானை அங்கீகரிக்க வேண்டும்’’ என்று பகிரங்கமாகவே கூறியுள்ளார்.