தென்காசி: கேரள மாநில எல்லையையொட்டி உள்ள தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கேரள மாநிலத்தில் இருந்து மருத்துவ கழிவுகள், இறைச்சி கழிவுகள், எலக்ட்ரானிக் கழிவுகளை கொண்டுவந்து சாலையோரங்களிலும், நீர்நிலைகளிலும் கொட்டப்படும் சம்பவங்கள் நீண்ட காலமாக தொடர்கிறது. கடந்த சில ஆண்டுகளாக தமிழக எல்லைகளில் உள்ள சோதனைச்சாவடிகளில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டு கழிவுகள் கொண்டுவரப்படுவது பெருமளவில் தடுக்கப்பட்டிருந்தாலும், அவ்வப்போது கழிவுகளை கொண்டுவந்து கொட்டும் செயல் முழுமையாக நிறுத்தப்படவில்லை.
திருநெல்வேலி மாவட்டத்தில் 6 இடங்களில் கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகள் டன் கணக்கில் கொட்டப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பேசு பொருளானது. தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டதன்பேரில் கேரள அதிகாரிகள் வந்து, இந்த கழிவுகளை லாரிகளில் ஏற்றி மீண்டும் கேரள மாநிலத்துக்கு கொண்டு சென்றனர். கொட்டப்பட்ட குப்பைகள் மீண்டும் அள்ளப்பட்டு, கேரளாவுக்கு கொண்டு செல்லப்பட்ட சம்பவம் முதல் முறையாக நடந்துள்ளது.